
வடக்கு பிரதேசத்தின் முன்னரங்க நிலைகளில் கடும் மோட்டார் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்கள் இடம்பெறுவதோடு, வன்னிப் பகுதியினுள் கிளேமோர் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வன்னியினுள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. வன்னிப் பிரதேசத்தினுள் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை மருந்துகளுக்குக் கூட பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வன்னியில் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் நிவாரண உதவிகள், உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு செயற்பட்டு வரும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.இந்த நிலையில் வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பக ஐ.நா. முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.வட பகுதியின் முன்னரங்க நிலையில் கடும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களும் இடம்பெற்று வருவதோடு வன்னிப் பகுதியினுள் கிளைமோர் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. மன்னாரின் வெள்ளாங்குளம், முழங்காவில் பகுதிகளிலும் ஓடங்குளம், கல்விளான், மல்லாவி, துணுக்காய் பகுதிகளிலும் இரு தரப்புக்குமிடையில் கடுமையான நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து மக்கள் முற்றாக வெளியேறி கிளிநொச்சி மாவட்டத்தின் மையப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் மாவட்ட செயலகத்தின் மதிப்பீட்டின் படி இறுதியாக 6,217 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 797 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஏற்கனவே இடம்பெயர்ந்த மடு, பண்டி விரிச்சான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை. மடு, மாந்தை மேற்கு பிரதேச செயலகங்கள், அடம்பன், மடு வைத்தியசாலைகள், மடு கல்வி வலயம் என்பன கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதேவேளை, கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச செயலகப் பகுதியைச் சேர்ந்த 9 ஆயிரத்து 392 குடும்பங்களும் பூநகரிப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்து 291 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட செயலகத் த கவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்ற நிலைமையே முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுவதாகவும் அங்கு சமார் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, வன்னியிலுள்ள வைத்தியசாலைகளில் பென்சிலின் ஊசி மருந்துகள், மெட்போர்மின், அஸ்ட்ரோவாஸ்ட்டெயின், போலிக் அசிட், பண்டேஜ், கோஸ், ஸ்பிறிற் உள்ளிட்ட அவசர வேளைகளில் உபயோகிக்கப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேவேளை அங்குள்ள வைத்தியசாலைகளில் சாதாரண நிலையில் தேவைப்படும் அடிப்படை மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான பணிகளை ஆற்றுவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஓமந்தை ஊடான ஒரேயொரு பாதை மாத்திரமே தற்போது உள்ளதால் விநியோகத்தில் பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வன்னியில் அத்தியாவசிய உணவுகள், நிவாரணப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. உலக உணவுத் திட்டம், யுனிசெப் உள்ளிட்ட ஐ.நா. முகவர் அமைப்புகளும் பல்வேறு சர்வதேச மனித நேய தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
No comments:
Post a Comment