
வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு. வன்னியில் உணவுத் தட்டுப்பாடு எனும் செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.வன்னியில் உணவுத் தட்டுப்பாடு எனும் செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
வன்னியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்துள்ள அரசாங்கம், இடம்பெயர்ந்த மக்களுக்கு 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வடக்கில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருகின்ற போதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும், அவர்கள் பாடசாலைகளிலும், தற்காலிக கூடாரங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்."சில முகவர் அமைப்புகள் குறிப்பிடுவதைப் போன்று இடம்பெயர்ந்தவர்கள் மரங்களின் கீழ் தங்கியிருக்கவில்லை. அந்தப் பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின்படி, இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளிலும், கூடாரங்களிலுமே தங்கியிருக்கின்றனர்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமைச்சு, உலக உணவுத் திட்டம் ஆகியன ஒருமாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் என அரசாங்க அதிபர்களுக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்."கடந்த 18 மாதங்களில் அங்கு எந்தவித உணவுத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. வவுனியாவைத் தளமாகக் கொண்டு அங்கிருந்து சகல இடங்களுக்கும் ஒழுங்கான முறையில் நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த 6 மாத காலத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 63 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசியும், 41 மில்லியன் ரூபா பெறுமதியான கோதுமை மாவும், 15 மில்லியன் ரூபா பெறுமதியான சீனியும், 2 மில்லியன் ரூபா பெறுமதியான மைசூர் பருப்பும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment