
பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்து அங்கு மாகாண சபையை ஏற்படுத்தியது போன்று விரைவில் வடக்கிலும் ஒன்பதாவது மாகாண சபையை ஏற்படுத்துவோம். பாராளுமன்றம், நீதிமன்ற நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்த ராஜ்ஜியம் வீழ்ச்சியடையும். இதற்கு இடமளிக்கலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சப்ரகமுவ வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று தெரிவான முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு பதவியேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மிக விரைவில் வடக்கில் ஒன்பதாவது மாகாண சபை உதயமாகும். அதற்காக எமது படையினர் அர்ப்பணிப்புடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிழக்கை மீட்டோம் இன்று அப்பகுதி மக்களுக்கு அவர்களுடைய தலைமையை வழங்கி ஜனநாயகத்தை வழங்கியுள்ளோம். இதே நிலை வடக்கில் உருவாகுவதற்கான காலம் தொலைவில் இல்லை. இவ்வாறான எமது படையினரின் அர்ப்பணிப்புக்கு மக்கள் மதிப்பளித்து தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நாட்டின் மீது பற்று கொண்ட மக்களை நாம் மதிக்கின்றோம். தெளிவான, சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணிக்கின்றோம். இதனை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். அதற்காக உங்கள் ஒத்துழைப்பு எமக்கு தேவை. மத்திய அரசாங்கம், மாகாண சபை, பிரதேச சபை மூன்றும் இணைந்து செயற்பட வேண்டும். பாராளுமன்றம், நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே ஒற்றுமை இணக்கப்பாடு இருக்க வேண்டும். அப்போதே நாட்டின் சுமுகமான நிலை இருக்கும். இம்மூன்றுக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்நாடு வீழ்ச்சியடையும். நீதிமன்ற சுயாதீனத்தை நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று பாராளுமன்றத்தின் கடப்பாட்டையும் மதிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதனை விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற விவாதம் நடத்தப்படுவதில்லை. ஒரு ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கு நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றம், நீதிமன்றத்திற்கிடையே இணக்கப்பாடு அவசியமானதாகும்.
No comments:
Post a Comment