Thursday, September 4, 2008

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் பயங்கரவாத நோக்கத்திற்கு இடமில்லை - பிரதமர் ரட்ணசிறி


தாய்நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதிகளின் அந்த நோக்கத்திற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான மறைந்த ஏ.யூ. ஜயவர்த்தனவினால் நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் பயிற்சி மத்திய ஸ்தானத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான ஆலோசனைகளை இந்த கட்டுரைகளிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கிராம பிரதேசத்திலிருந்து அரச சேவைக்குள் நுழைந்த அவர், பொருளாதாரத்தை கிராம மட்டத்திலிருந்து எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்த நிலையில் இந்த ஆலோசனைகள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் பயங்கரவாதிகள் பொதுமக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

No comments: