Wednesday, October 22, 2008

காங்கேசன்துறையில் சரக்குக் கப்பல்கள் மீது தற்கொலைத் தாக்குதல்



யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற இரு சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய இரு கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதை விடுதலைப் புலிகள் மறுப்பதாக பாதுகாப்புத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்குச் சென்றிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய கடற்படைச் சிப்பாய் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு நிமல்லவ கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் வெடித்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நிமல்லவ கப்பலுக்கு கணிசமானளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக டி.கே.பி.தசநாயக்க தெரிவில்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

No comments: