Tuesday, November 25, 2008

யாழ் குடாநாட்டில் மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டது: இராணுவப் பேச்சாளர்


பூநகரி இராணுவத்தினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாடடு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை தளர்த்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

வடமேற்குப் பகுதியின் கடற்பகுதி முழுவதும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குடாநாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடையைத் தளர்த்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கமைய குடாநாட்டு மீனவர்கள் காலை 6.30 மணிமுதல் மாலை 4 மணிவரை மீன்பிடிக்க முடியும் எனவும், முன்னர் விதிக்கப்பட்டிருந்த கரையிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரம் என்ற தடை நீக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பிற்பகல் 3 மணிவரை கரையிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலான கடற்பகுதியில் மாத்திரம் மீன்பிடிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதனால் அவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மீன்பிடித் தடை மீனவர்களைப் பாதித்துவிட்டது. பூநகரியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்ததாலேயே இந்தத் தடைகளை நாம் ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது” என இராணுவப் பேச்சாளர் கூறினார்.
மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டிருப்பதால் மீனவர்கள் தமது வருமானங்களை அதிகரித்துக்கொள்ளமுடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயகார மேலும் தெரிவித்தார்.
பூநகரி மீட்கப்பட்டிருப்பதால் யாழ் குடாநாட்டின் தீவகப் பகுதி மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை நீக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்திருந்தார்.

No comments: