மேற்கு ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் வடக்குப் பகுதிகளை அரசாங்கப் படைகள் நெருங்கி வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
57வது படையணி கொக்காவிலை நெருங்கியிருப்பதுடன், அதிரடிப்படை-2 மாங்குளத்தை அண்மித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, அக்கராயன் குளத்திற்கு மேற்கே நேற்றுமுன்தினம் புதன்கிழமை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது மேற்கொண்;ட தாக்குதலில் இரண்டு பதுங்கு குழிகள் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
அதிரடிப்படை-1 நாச்சிகுடா பகுதியில் கடந்த புதன்கிழமை முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 3 போராளிகள் காயமடைந்துள்ளனர்.
வன்னேரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 4 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படும் அதேவேளை,விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அமைந்துள்ள இடத்தை படையினர் தாக்குதல் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் ஒலிபரப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் உயரிழந்ததாகவும்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வானொலி தொடர்பாடல் உபகரணங்கள் ரி-56 றிபிள் மற்றும் 300 குண்டுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு, கடந்த புதன்கிழமை வவுனியாவிற்கு வடமேற்கே பாலமோட்டைப் பகுதியில் அதிரடிப்படை-2க்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாகவும், அங்கு ரி-56 ஆயுதத்துடன் 65 துப்பாக்கி ரவைகள், 3 குண்டுகள் மற்றும் 3 கைக்குண்டுகள் ஆகியனவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஓமந்தை வீதிக்கு அண்மையாகவுள்ள நாவற்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குழிகள் அமைந்துள்ள பகுதிகளில் 56வது படையணியினர் கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளுடன் மோதியதாகவும், இதன்போது பகுங்குழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாகவும் படையினர் உறுதிப்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
முல்லைத்தீவு ஆண்டான்குளம் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன், 59வது படையணியினர் சண்டையில் ஈடுபட்டதாகவும், இதன்போது 5 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்ததாகவும் படையினர் கூறிய அதேவேளை, படைத்தரப்பில் 17 பேர் உயரிழந்தும், காயமடைந்துள்ளததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.