
பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்த விவாதங்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா இந்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரரேணை தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசாங்கம், அவசர அவசரமாக நாளையதினம் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரரேரணை குறித்த விவாதத்தை நாளையதினம் நள்ளிரவுவரை நடத்துவதற்குத் தாம் தயாரென அரசாங்கம், சபாநாயகருக்கு அறிவித்தது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் நாளையதினம் நடத்தப்படும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். எனினும், நாளையதினம் விவாதத்தை நடத்தத் தாம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார்.
“மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த விவாதத்தை இரண்டாவது வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.
இதன்போது குறிக்கிட்ட சபை முதல்வர் நிமால்.சிறிபால.டி.சில்வா, இந்த விடயம் அவசரமானது என்பதாலேயே விவாதத்தை நாளைக்கு நடத்த இணங்கியதாகக் கூறினார்.
எனினும், தாமே இந்தப் பிரேரணையை முன்வைத்ததாகவும், எனவே, விவாதத்துக்கான திகதியும் தம்மாலேயே தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் யோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புக்குமிடையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்த விவாதங்களிலும் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென் கூறிவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.
No comments:
Post a Comment