Tuesday, August 19, 2008

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே படையினர் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே படையினர் யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர்.வெகுவிரைவில் வடக்கை விடுவித்துவிடுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
ருவன்வெல்லவில் நேற்று(18) பிற்பகல் நடத்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகியோர் அனைவரும் இந்த நாட்டில் அமைதியாகவும் சகோதரர்களாகவும் வாழவேண்டுமென்ற அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது
இனம், மதம், சாதி, கொள்கை, அரசியல் நலன்கள் ஆகியவற்றுடன் ஒரே குடும்பமாக இந்த நாட்டில் வாழ்வதற்கேற்ற சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப் பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
படையினர் யுத்தத்தை முன்னெடுப்பதால் அவர்கள் பயங்கரவாதப் பிடியிலிருந்து பல பிரதேசங்களை விடுவித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு மக்கள் தனக்கும் தனது அரசாங்கத்திற்கும் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் தான் பின்னிற்கப்போவதில்லை நாடு இரண்டாகப் பிளவுபடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

வன்னிப்புகைப்படங்களை இஸ்ரேல் “”ஒபெக் செய்மதிப்பிரிவு’ றோ அமைப்புக்கு வழங்கியது

கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளேடாகிய “”ஸ்ரேற் ரைம்ஸ்’ (State Times) செய்தித்தாள் சார்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் செவ்வி காணப்பட்ட போது பத்திரிகையாளர் ஸ்ரீலங்காவில் தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்குமிடையே வன்னியில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் பற்றியும் எதிர்பார்க்கப்படக்கூடிய யுத்த விளைவு பற்றியும் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆய்வு அமைப்பாகிய “”றோ’ அதன் அறிக்கையில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்ந்து யுத்தம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அறிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “”றோ’ அமைப்பு இந்தப் பாதுகாப்பு நிலைமை ஆய்வை பாதுகாப்புத் தகவல்களின் அடிப்படையில் மட்டும் செய்யவில்லை எனவும் ஸ்ரீலங்கா இராணுவப் படையணிகள் புலிகள் இயக்கத்தின் பலக்கோட்டைகள் எனக்கருதப்படும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களுக்குள் பிரவேசித்து கேந்திரப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் “”றோ’ அமைப்புக்குக் கிடைத்துள்ளதாகவும் அத்துடன் புதுடில்லியில் அமைந்துள்ள “”றோ’ தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு புலனாய்வுகளை மேற்கொள்ளுவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆயுதக்கருவிகள், உபகரணங்கள் மூலம் கிளிநொச்சி முல்லைத்தீவு களநிலைமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வன்னியில் அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் கேந்திரப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் யுத்தம் மற்றும் அரசபடையினர் வன்னிக்குள் முன்னேறித் தற்போது நிலைகொண்டுள்ள கேந்திரப் பகுதிகள் ஆகியவற்றைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்கள் இஸ்ரேலின் அதிஉயர் தொழில்நுட்பங்கள் கொண்ட “”ஒபெக்’ செய்மதி மூலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகைப்படங்களை “”ஒபேக்’ செய்மதிச் செயற்பாட்டுப் பாதுகாப்புப் பிரிவு அண்மையில் இந்திய அரச பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு “”றோ’வுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான பாதுகாப்புத் தகவல்களுக்கு அப்பால் “”றோ’ அதன் உயர்தொழில்நுட்பக் கருவிகள் மூலம் பெற்ற புகைப்படங்கள் மற்றும் முக்கியமாக இஸ்ரேலின் “”ஒபெக்’ செய்மதி வழங்கிய புகைப்படங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு பிரபாகரன் தொடர்ந்தும் யுத்தம் செய்யமுடியாத நிலையில் முடங்கிவிட்டதாக “”றோ’ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆதாரபூர்வமான “”றோ’வின் இந்த அறிக்கை காரணமாகவே அண்மையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மேற்படி சிங்கப்பூர் “”ஸ்ரேற் ரைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்று உறுதியாகத் தெரிவித்தார். இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அவர் தெரிவித்த ஏனைய காரணங்களில் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கடத்த முடியாத வகையில் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடற்பிராந்தியங்களில் ஸ்ரீலங்கா கடற்படையினராலும் இந்தியக் கடற்படையினராலும் எடுக்கப்பட்டிருப்பதும் புலிகள் இயக்கம் பலமிழந்துபோய்விட்டதற்குக் குறிப்பிடும்படியான காரணம் எனக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பிரபாகரனின் புலிகள் இயக்கம் பலமிழந்துவிட்டது என்பதை இந்தியப் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பாகிய “”றோ’ அமைப்பும் இந்திய பாதுகாப்புத்துறை உயர்அதிகாரி ஒருவரும் வெளிப்படையாகக் கூறியிருப்பதும், ஏற்றுக்கொண்டிருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு. வன்னியில் உணவுத் தட்டுப்பாடு எனும் செய்திக்கு அரசாங்கம் மறுப்பு


வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு. வன்னியில் உணவுத் தட்டுப்பாடு எனும் செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது. இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.வன்னியில் உணவுத் தட்டுப்பாடு எனும் செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
வன்னியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளை மறுத்துள்ள அரசாங்கம், இடம்பெயர்ந்த மக்களுக்கு 2 வாரங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வடக்கில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருகின்ற போதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும், அவர்கள் பாடசாலைகளிலும், தற்காலிக கூடாரங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்."சில முகவர் அமைப்புகள் குறிப்பிடுவதைப் போன்று இடம்பெயர்ந்தவர்கள் மரங்களின் கீழ் தங்கியிருக்கவில்லை. அந்தப் பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின்படி, இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளிலும், கூடாரங்களிலுமே தங்கியிருக்கின்றனர்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமைச்சு, உலக உணவுத் திட்டம் ஆகியன ஒருமாத காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் என அரசாங்க அதிபர்களுக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்."கடந்த 18 மாதங்களில் அங்கு எந்தவித உணவுத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. வவுனியாவைத் தளமாகக் கொண்டு அங்கிருந்து சகல இடங்களுக்கும் ஒழுங்கான முறையில் நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த 6 மாத காலத்தில் கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 63 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசியும், 41 மில்லியன் ரூபா பெறுமதியான கோதுமை மாவும், 15 மில்லியன் ரூபா பெறுமதியான சீனியும், 2 மில்லியன் ரூபா பெறுமதியான மைசூர் பருப்பும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை'யினை விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அமுல்படுத்துக -அரசாங்கம் கோரிக்கை

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரீ.சீ.சி ஆகிய அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் செயற்பட்டுவருவது தொடர்பான ஆவணங்களையும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை'யினை விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் அமுல்படுத்தவேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளதாக, அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரீ.சீ.சி ஆகிய அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் செயற்பட்டுவருவது தொடர்பான ஆவணங்களையும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளபோதிலும், இணையத்தளம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக தற்போதும் அவர்கள் நிதிசேகரிப்பு மற்றும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், இந்த நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐரோப்பிய பொறிமுறையினை அமுல்படுத்தவேண்டும் எனவும் அரசாங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளதாக தெரியவருகிறது."விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் நிறுவனங்கள் குறித்த ஆவணங்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்ப்பித்துள்ளோம். சுனாமி நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட பணம் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் இதுகுறித்து தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்த விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெளிவுபடுத்துவது இலகுவான விடயமல்ல. இதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். இருப்பினும் இதற்கான அழுத்தங்களை நாம் வழங்கிக்கொண்டிருப்போம்" என அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான 'ஐரோப்பிய பொறிமுறை' அல்கைதா இயக்கத்திற்கு எதிராக அமுல்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், அதுபோன்றே விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது."விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்திருந்தாலும், அவர்களது செயற்பாடுகள் அங்கு வேறுவழிகளில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் 27 நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், ஒரு நாடு எதிர்த்தாலும், இதனை அமுல்படுத்த முடியாது" என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர் மத்தியில், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் அமைப்புக்கள் தொடர்பாக அறிவூட்டும் சமூக மட்டத்திலான செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஐஎன்லங்கா இணையம்