Friday, April 3, 2009

Wanni Operation2009-04-02

வவுனியாவில் கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்கள் கைது


வவுனியாவில் எட்டு பேரை கடத்திச் சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்திய புளொட் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த எட்டு பேரையும் வவுனியாவிலுள்ள புளொட் காரியாலயத்தில் வைத்து சித்திரவதைப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி குறித்த நபர்களை புளொட் உறுப்பினர்கள் கடத்தியுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட நபர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் கப்பமாக பெற்றுக்கொள்ள புளொட் உறுப்பினர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட அனைவரும் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதென வவுனியா நிருபர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு இன்று முதல் தொலைபேசி வசதிகள்:அமைச்சர் ரிஷாத் பதியுதீன்


வவுனியா நிவாரணக் கிராமங்களில் இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சும் இணைந்து தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள், வசதிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, கொள்ளுப்பிட்டியிலுள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில்:
புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 62,212 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலர் உணவு, சுகாதாரம், கல்வி, தற்காலிக வசிப்பிடம், மாதிரிக் கிராமம் உள்ளிட்ட சகல வசதிகளும் சிறப்பாக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, இந்த நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமது உறவினர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் தற்பொழுது தொலைபேசி இணைப்புகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையங்களுக்கும் இரண்டு தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இந்த தொலைபேசி இணைப்பு இன்று முதல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.

பாணமையில் விசேட அதிரடிப் படையினரால் 13 புலிகள் சுட்டுக் கொலை: இன்று காலையில் சம்பவம்


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாணமை பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்படடுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் தயாரிப்பதில் மிகவும் கைதேர்ந்தவரான பரமானந்தா என்பவரும் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வணங்கா மண் கப்பலைத் தடுத்து நிறுத்த முயற்சி


வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், ஊடகங்கள் வாயிலாகவே வன்னி மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிக்கொண்டு நிவாரணக் கப்பலொன்று பிரித்தானியாவிலிருந்து புறப்படவுள்ளது என்ற தகவல் தமக்குத் தெரியவந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
எந்தவொரு கப்பலும் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைவதாயின் சட்டரீதியான அனுமதியின் பின்னரே நுழையமுடியும் என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஆனாலும், பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் கப்பல் குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர், குறித்த கப்பல் தொடர்பாக பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாயின் கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ‘வணங்கா மண்’ கப்பல் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தானிய அதிகாரிகளால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாக நிவாரணக் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான க்ரஹாம் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் சட்டவிரோத கப்பல்களைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது.

Thursday, April 2, 2009

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு


தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

நிவாரணம் என்ற போர்வையில் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்: கடற்படை




உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று விரைவில் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் இணைந்து வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக பிரித்தானியாவில் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் உதவியுடன் கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்தக் கப்பல் இம்மாதம் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பொதுமக்களுக்கான நிவாரணம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதற்காக 2000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகவும், இந்தக் கப்பல் குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிச்செல்லும் எந்தவொரு கப்பலையும் தடுத்து நிறுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார்

முத்துலிங்கம் தேவகுமார் (பிரபு) மறைவு : கண்ணீர் அஞ்சலி


திருகோணமலைச் சேர்ந்த முத்துலிங்கம் தேவகுமார் தனது பத்தொன்பதாவது வயதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) தன்னை இணைத்துக் கொண்ட சில மாதங்களுக்கு முன்புதான் ’83-ஜூலை நெடுங்குருதி’ திண்ணைவேலியில் இருந்து வெலிக்கடைச் சிறை வரை பாய்ந்து இலங்கையின் அரசியல் போக்கை தலைகிழாக்கிப் போட்டது.
தமிழ் மக்களின் ‘சுயகெளரவம்’ என்பதை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் தலைமை, இனவாத அரசியலாக்கி ’பயங்கரவாதம்’ ஆக சித்தரித்த போது, அதை மூர்க்கமாக எதிர்த்து முகம்கொள்ள கிளர்ந்த ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்களில் தேவகுமார் ஒருவன்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தபின் ‘பிரபு’ என்றழைக்கப்பட்ட இவனதும் இவனையொத்த பல இளைஞர்களின் கனவுகள், விடுதலைக்கென ஆயுதம் தூக்கியோரின் ’புதிய பயங்கரவாதம்’ கோரமான சிதைத்து அழித்து விட்டுப்போன தமிழ் அரசியல் சூழலில், நோயுற்று `இயற்கை` மரணமெய்திய இவன் போன்றோரின் ’நடுகல்’லில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் சில வார்த்தைகள் `இனி`யாவது பதியப்பட வேண்டும்.
ஆம்,
”மரணம் மகத்தானது வாழ்வு அதைவிட மகத்தானது’’

Wanni Operation 2009-04-01

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள்


புதுக்குடியிருப்புக்கு கிழக்காக தாக்குதலில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈ பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்று பிற்பகல் பச்சப்புல்மூடையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத எல்ரிரியினர் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டு தப்பிச்செலவதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின் போது 19 பயங்கரவாதிகளின் உடல்கள் மற்றும் படைப் பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.
19 ரி௫6 ரகதுப்பாக்கிகள்,இரண்டு பிரதான தொடர்புமைய சாதனங்கள், என்பன கைபற்றப்பட்ட பொருட்களுள் அடங்குவதாக படையினரின் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் இதுவரை உயிரிழப்பு


முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சைப் பலனின்றி 60 பேர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்ததாவது:
“முல்லைத்தீவில் இருந்து இதுவரை 16 தடவைகள் காயமடைந்தவர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். திருகோணமலை வைத்தியசாலைக்கு 3635 பேரும் புல்மோட்டைக்கு 2962 பேரும் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர்களுக்கு உதவிபுரிய வந்தவர்களும் அடங்குவர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 10 தடவைகளில் அழைத்துவரப்பட்டோரில் 46 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 14 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் மரணமடைந்தனர். 16 தடவையாக அழைத்து வரப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி இவ்வாரம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் ஆண் ஒருவரும் அடங்குவர்..
இறுதியாக 164 ஆண்களும் 227 பெண்களும் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 60 பேர் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளாவர். 8 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 54 பேரும் இறுதியாக அழைத்து வரப்பட்டவர்களில் அடங்குவர். திருகோணமலை வைத்தியசாலையில் தற்போது 254 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 128 பேர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையை அடுத்து வவுனியா, பதவியா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர்மீது தாக்குதல் : அலுவலகமும் சேதம்


மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரஹ்மத்துல்லா (54) மீது தாக்குதல் நடத்திய இனந்தெரியாத குழுவொன்று அவரது அலுவலகத்துக்கும் விட்டுக்கும் தீ வைத்துள்ளன. இச்சம்பவம் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காத்தாதன்குடி ஏ.எல்.எஸ். வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் கடமையிலீடுபட்டிருந்தபோது திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவர் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். அதன் பின்னர் காரியாலயத்திலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன் தீயும் வைத்துள்ளனர். அத்துடன் அவரது வீட்டுக்கும் சென்று தீ வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

Friday, January 9, 2009

ஆனையிறவை நோக்கி இரு படை அணிகள் முன்னேற்றம்: எந்த நேரத்திலும் கைப்பற்றப்படலாம்


பளை, சோரன்பற்று பிரதேசங்களைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இராணுவத்தினர் தற்போது ஆனையிறவை நோக்கிச் செல்வதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் சற்று நேரத்துக்கு முன் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனையிறவுப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத்துவமிக்க கேந்திர நிலையமாகத் திகழ்கிறது.
இராணுவத்தின் 53 மற்றும் 55 ஆவது படையணியே ஆனையிறவை நோக்கிய முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளன.ஆனையிறவு எந்த நேரத்திலும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாமெனவும் அந்த நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, இராணுவத்தினரின் 55 ஆவது படைப் பிரிவினர் நேற்று மாலை சோரம்பற்றுப் பிரதேசத்தைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
சோரம்பற்றுப் பிரதேசம் ஆனையிறவுலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலும் பளையிலிருந்து 5.2 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
இராணுவத்தின் 6 ஆவது பிரிவும் 7 ஆவது விஜயபாகு அணியும் 4 ஆவது கெமுனு மற்றும் 8 ஆவது விஜயபாகு படையணிகளே சேரன்பற்றுப் பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
சேரன்பற்றை கைப்பற்றும் நடவடிக்கையின் போது இராணுவத்தினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.

20ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு



பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சபாபீடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஆளும் தரப்பினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. எனினும், சூச்சல் குழப்பங்களுக்கும் மத்தியில் சபையின் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா என சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இன்றையதினம் அது குறித்து விவாதிக்கத் தாம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியினர் பதிலளித்துள்ளனர். எனவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒத்திவைக்க வேண்டுமென சபை முதல்வர் நிமால்.சிறிபால.டி.சில்வா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இரத்துச் செய்த சபாநாயகர், சபை அமர்வுகளை எதிர்வரும் 20ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

லசந்தவின் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணிக்கு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் கூடிய ஊடக, அரசியல், சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் லசந்தவின் படுகொலையைக் கண்டித்தும், சிரச ஊடகம் மீதான தாக்குதலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்,சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரின் கொலையைக் கண்டித்ததுடன், அதற்குக் காரணமானவர்களை அரசாங்கம் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
சுமார் ஒன்றரை மணித்தியாலம் நீடித்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன, தயாசிரி ஜயசேகர, ஜோசப் மைக்கல் பெரேரா, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், இடதுசாரிக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரரைக் கட்டுப்படுத்துமுகமாக பொலிசார் கலகமடக்கும் பொலிஸாரை அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தியிருந்ததுடன், லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்திற்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

Thursday, January 8, 2009

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி



இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணா அம்மானுக்கும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா அம்மான் 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இராணுவத்தினரக்கு உதவிசெய்ததாகச் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, கிழக்கிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இராணுவத்தினருக்கு மறைமுகமான உதவிகளைச் செய்துவந்ததால் கிழக்கை மீட்க முன்னரே அப்பகுதி மக்களின் நம்பிக்கையை தாம் வென்றுவிட்டதாகக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 20 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே இராணுவத்தினர் போராடி மீட்டதாகக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, எஞ்சிய 89 கிலோமீற்றர் தூரத்தை இராணுவத்தினர் இலகுவில் மீட்டதாகத் தெரிவித்தார்.
கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னர் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவு எனக் கூறப்பட்டபோதும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் இராணுவத்தினர் போராடி வருவதாகக் கூறினார்.

பயங்கரவாதத்தை தடுக்க சர்வதேசத்துடன் இணைந்துள்ளோம்: அரசாங்கம்



இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் சர்வதேச நாடுகளைப் போன்று விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கமும் தடைசெய்திருப்பதாக சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.

புற்றுநோய் போன்று சிவில் சமூகத்தைப் பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு விடுதலைப் புலிகளைத் தடைசெய்து, இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளுடன் இணைந்துகொண்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
அமெரிக்கா, கனடா, இந்தியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளை ஏற்கனவே தடைசெய்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த நாடுகளுடன் இலங்கையும் இணைந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பிராந்தியத்தில் பயங்கரவாதத்துக்கான உட்கட்டுமானங்கள் முதலில் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தமையையும் அமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தததன் மூலம் அந்த அமைப்புக்கு எதிரான போரர்டடத்தில் இணைந்துகொண்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம குறிப்பிட்டார்.
“எனவே, இதுவொரு சர்வதேச ரீதியான நடவடிக்கை. இலங்கையில் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பாக விடுதலைப் புலிகள் இல்லை. பிராந்தியத்தில் அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்களைத் தடைசெய்து உலக நாடுகள் முன்னெடுத்திருக்கும் பிரசாரத்துடன் இணைந்துள்ளோம்” எனக் கூறினார்.
கதவு திறந்தே உள்ளது
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவே இருப்பதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற விவாதங்களில் ஐ.தே.க. கலந்துகொள்ளாது



பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்த விவாதங்களிலும் கலந்துகொள்ளப்போவதில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா இந்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.
நம்பிக்கையில்லாப் பிரரேணை தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரசாங்கம், அவசர அவசரமாக நாளையதினம் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்தது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரரேரணை குறித்த விவாதத்தை நாளையதினம் நள்ளிரவுவரை நடத்துவதற்குத் தாம் தயாரென அரசாங்கம், சபாநாயகருக்கு அறிவித்தது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் நாளையதினம் நடத்தப்படும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். எனினும், நாளையதினம் விவாதத்தை நடத்தத் தாம் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா கூறினார்.
“மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த விவாதத்தை இரண்டாவது வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்துவோம்” எனத் தெரிவித்தார்.
இதன்போது குறிக்கிட்ட சபை முதல்வர் நிமால்.சிறிபால.டி.சில்வா, இந்த விடயம் அவசரமானது என்பதாலேயே விவாதத்தை நாளைக்கு நடத்த இணங்கியதாகக் கூறினார்.
எனினும், தாமே இந்தப் பிரேரணையை முன்வைத்ததாகவும், எனவே, விவாதத்துக்கான திகதியும் தம்மாலேயே தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் யோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தரப்புக்குமிடையில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. இறுதியில், பாராளுமன்றத்தில் நடைபெறும் எந்த விவாதங்களிலும் தாம் கலந்துகொள்ளப் போவதில்லையென் கூறிவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.

Wednesday, January 7, 2009

குறைந்த வயதினரை இயக்கத்தில் சேருமாறு புலிகள் பலாத்காரமாக அழைப்பு


முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிவிலியன்களில் குறைந்த வயதுடையவர்களை இயக்கத்தில் சேருமாறு புலிகள் வானொலி மூலம் அழைப்பு விடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மறைமுகமாக தப்பி ஓடிவந்து படையினரிடம் சரணடைந்துள்ள சிவிலியன்கள் இந்த தகவல்களை கூறியதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு புலிகள் தமது பலத்தை இழந்துள்ளமையை உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்,
இவ்வாண்டு முதலாம் திகதி முதல் ஆறாம்திகதி வரையான ஆறு நாட்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி 141 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர்.
பரந்தன், கிளிநொச்சி, ஓமந்தை மற்றும் நெடுங்கேணி பகுதிகளிலுள்ள பாதுகாப்பு படையினரிடமே இவர்கள் சரணடைந்துள்ளனர்.
17வயதிலிருந்து 40 வயது வரையான இளைஞர்களை இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெறுமாறு புலிகள் பலாத்காரமாக அழைப்பு விடுப்பதுடன் ஏனையோரும் உதவி ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கூறிவருவதாக கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்துள்ளவர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், நாளாந்தம் பெருந்தொகையான புலிகள் கொல்லப்படுவதுடன் படுகாயமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகமான புலிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் புலிகலின் ஆடம்பர பதுங்குகுழிகளை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்


கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அனைத்து நிர்வாகக் கட்டிடங்களுக்கும் அருகாமையில் இருந்து பாதுகாப்பான வகையில், ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்ட பதுங்குகுழிகளை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொறி வெடிகள், கண்ணி வெடிகள் மற்றும் பொறிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரே இவ்வாறான பதுங்குகுழிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இவை இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது களிமண் மற்றும் சீமெந்து கொண்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளைக் காட்டிலும் துல்லியமாகவும், “தேக்கு” மரத்தினால் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவத்தினரை மேற்கோள்காட்டி இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் மேற்கொள்ளும் ஆட்லறி தாக்குதல்களுக்கும், பலத்த விமானக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்வுகளுக்கும் தாக்குப்பிடிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேக்கு மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதுங்குகுழிகளில், நவீன மின்சார அலங்காரங்களும் காலத்திற்குக் காலம் பயன்படுத்தப்பட்ட குளிரூட்டிகளும் காணப்படுவதாக இராணுவத்தினர் கூறியிருப்பதாக அந்தச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவை ஆடம்பரமாக அமைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் சர்வதேச முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக இந்தப் பதுங்குகுழிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஹர்ஜியை வரவேற்க இலங்கை தயாரில்லை: டி.ஆர்.பாலு


இலங்கை அரசாங்கம் விரும்பாமல் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்ப இயலாதென மந்திய கப்பல்த்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நினைத்தவுடன் பிரணாப் முஹர்ஜியைக் கொழும்புக்கு அனுப்பமுடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்குப் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் இருப்பதாகவும் கூறினார்.
பிரணாம் முஹர்ஜியை கொழும்புக்கு அனுப்ப நாங்கள் தயாராகவுள்ளோம். ஆனால், அதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை” என்றார் மத்திய அமைச்சர்.
ஒருவரின் வீட்டுக்கு விருந்தாளியாகச் செல்வதாயின் வரவேற்பதற்கு மற்றையவர் தயாராகவிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ரி.ஆர்.பாலு, அதேபோல இலங்கை அரசாங்கமும், முஹர்ஜியை வரவேற்கத் தயாராகவில்லையெனவும் கூறினார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் விடயத்தில் மத்திய அரசாங்கம் நேர்மையாக நடத்துக்கொள்வதுடன், தாதம் காட்டவில்லையெனவும் தெரிவித்துள்ளார். பிரணாப் முஹர்ஜி இலங்கை செல்லவேண்டும் என விரும்புகின்றபோதும், நிலைமை அதற்கு சாதகமாக இல்லையெனவும் பாலு குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முஹர்ஜி கொழும்புக்குச் செல்வார் என்பது உறுதியாகியுள்ளபோதிலும், அதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையென மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.

தற்பொழுது நிலைமை மாறிவிட்டது புலிகளால் கெரில்லா தாக்குதல் நடத்த முடியதாம்:கருணா அம்மான்


இலங்கை அரசாங்கப் படைகள் நவீனரக இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்துவதால் விடுதலைப் புலிகளால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தமுடியாத நிலை தோன்றியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார். இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையிலிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் கெரில்லாத் தாக்குதல்களை நடத்த முடிந்தது எனக் குறிப்பிட்டிருக்கும் கருணா, நவீனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் தற்காலத்தில் கெரில்லாத் தாக்கதல்களை முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. இதனால், விடுதலைப் புலிகளால் காட்டுப் பகுதியில் கெரில்லா தாக்குதல்களை முன்னெடுக்கமுடியாது” என விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கெரில்லாத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தார்கள் என்பது உண்மை எனக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது அவர்களால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்த முடியாது எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொதுமக்கள் தமது உணவுப் பொருள்களை வழங்கியிருந்தார்கள் எனவும், தற்பொழுது அதற்குச் சந்தர்ப்பம் இல்லையெனவும் கருணா கூறினார்.

Sunday, January 4, 2009

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வறுமைப்பட்ட மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கியது


சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் 2ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சபைகளின் ஒத்துழைப்புடன் திருகோணமலைப் பிரதேசங்களிலிருந்து வறுமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டஆகக்குறைந்தது ஐந்து குடும்பங்களை சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் இலவசமாக வழங்கும் வைபவம் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்டக் காரியாலய சிறீ ரெலொ உறுப்பினர்களால் ஓழுங்கு செய்யப்பட்டது.
காலை 10.30 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் திரு. பரராஜசிங்கம் உதயராசா (உதயன்), சிறீ ரெலோவின் முக்கியஸ்தர்கள், சிறீ ரெலோவின் திருகோணமலை மாவட்டத் தலைவர்கள், திருகோணமலை மாவட்ட உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாபூஷணம் தில்லை முகிலன், கோயில் குருக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சமுகமளித்த அனைவரும் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இந்த தொண்டு நிகழ்வின் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட மக்களின் பிள்ளைகள் ஓவ்வொருவருக்கும் தலா ஆயிரத்திற்குக் குறையாத மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். விழாவிற்கு நூற்றுக்கணக்கான பொது மக்கள் வருகை தந்திருந்தனர். விழாவுக்கு உரிய நேரத்தில் வருகை தர முடியாதவர்களுக்கும் தாமதமாக கேள்விப்பட்டு வந்த மூவின மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மீட்கப்பட்டு புலிகளின் பலம் உடைத்தெறியப்பட்டுள்ளது:அமைச்சர் டக்ள ஸ் தேவானந்தா


இவ்வளவு காலமும் புலிகள் தமது அதிகாரத்தைப் பலத்த தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்தார்கள்.
தமிழ் மக்களின் எதிர்காலத் திற்காக புலிகள் அதிகாரத்தையோ, பலத்தையோ பிரயோகித்ததில்லை. மனிதக் கேடயங்களாக மக்களை தடுத்து வைத்துக்கொண்டு அரா ஜகம் புரிந்துகொண்டிருந்தவர்களின் அந்திமக்காலம் வந்துள்ளது.
கிளிநொச்சி மீட்கப்பட்டதுடன், புலிகளின் பலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாக தமது வாழ்விடங்களில் வாழும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
கிளிநொச்சி நகரை கைப்பற்றியுள்ளதுடன், அங்கு சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து படைத்தரப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புலிகள் அமைப்பை அடுத்தவாரம் தடைசெய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன?


கிளிநொச்சியை அரசாங்கப் படைகள் கைப்பற்றியிருக்கும் சூழ்நிலையில் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது பற்றி அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அமைய அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வது பற்றி அரசாங்கம் சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடி வருவதாகக் கூறப்படுகிறது.
வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் அனைவரையும் புலிகள் விடுவிக்கவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், புலிகள் அமைப்பை தடைசெய்வது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுமக்களை புலிகள் தடுத்துவைத்திருக்கும் விடயம் பற்றிக் கலந்துரையாடப்படும் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி விடுத்த வோண்டுகோளுக்கு புலிகள் மதிப்பளிப்பார்களா என்பதை அவதானித்து வருகின்றோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் தடைசெய்வது பற்றி தீர்மானம் எடுப்போம். பொதுமக்கள் தரப்பிலிருந்து எமக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்றார் ரம்புக்வெல.
இதேவேளை, தமிழர்களின் சட்டப்படியான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும், புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக்க நேற்றுக் கோரிக்கை விடுத்திருந்தது. புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கம் தடைசெய்யுமாயின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான பாதைகள் அடைக்கப்பட்டுவிடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தலதாமாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 1998ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு முதலில் தடைசெய்யப்பட்டது. பின்னர், 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அந்தத் தடை நீக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பரந்தனில் இருந்து ஆனையிறவை நோக்கி படையினர் முன்னகர்வு -இராணுவ ஊடக பேச்சாளர்:பிரிகேடியர் உதயநாணயக்கார


பரந்தனில் இருந்து ஏ 9 வீதி வழியாக புறப்பட்ட படையினர் தற்போது ஆனையிறவு தெற்கு புறத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி கிழக்கு புறத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
முன்னேறி செல்லும் படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினர் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள புலிகளின் நிலைகள் மீது நான்கு முறை விமான தாக்குதல்களை நடத்தியதாக விமானப் படையின் ஊடக பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
கிளிநொச்சியின் கிழக்கு புறத்தில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார ஆனையிறவை நோக்கிச் செல்லும் படையினருக்கு பாரிய எதிர்ப்புகள் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தண்ணீரூற்று பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளியவளையை கைப்பற்றும் நோக்கில் முன்னேற முயலும் படையினர் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
எறிகணை, பீரங்கி குண்டுத் தாக்குதல்களால் முல்லைத்தீவு மற்றும் அதனை அண்டிய கிராமங்கள் அதிர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் கடந்த வியாழக்கிழமை முதல் முல்லைத்தீவுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.