Friday, April 3, 2009

Wanni Operation2009-04-02

வவுனியாவில் கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்கள் கைது


வவுனியாவில் எட்டு பேரை கடத்திச் சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்திய புளொட் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த எட்டு பேரையும் வவுனியாவிலுள்ள புளொட் காரியாலயத்தில் வைத்து சித்திரவதைப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி குறித்த நபர்களை புளொட் உறுப்பினர்கள் கடத்தியுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட நபர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் கப்பமாக பெற்றுக்கொள்ள புளொட் உறுப்பினர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட அனைவரும் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதென வவுனியா நிருபர் தெரிவித்தார்.

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு இன்று முதல் தொலைபேசி வசதிகள்:அமைச்சர் ரிஷாத் பதியுதீன்


வவுனியா நிவாரணக் கிராமங்களில் இன்று முதல் தொலைபேசி வசதிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சும் இணைந்து தொலைபேசி இணைப்பு வசதிகளை செய்துகொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் இந்த தொலைபேசியைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தங்களது உறவினர்களுடன் தொடர்புகொள்ள வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த பொதுமக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிவாரண உதவிகள், வசதிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு, கொள்ளுப்பிட்டியிலுள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.
அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில்:
புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 62,212 பொதுமக்கள் தப்பிவந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, உலர் உணவு, சுகாதாரம், கல்வி, தற்காலிக வசிப்பிடம், மாதிரிக் கிராமம் உள்ளிட்ட சகல வசதிகளும் சிறப்பாக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, இந்த நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள தமது உறவினர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் தற்பொழுது தொலைபேசி இணைப்புகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையங்களுக்கும் இரண்டு தொலைபேசிகள் என்ற அடிப்படையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 15 நிவாரண நிலையங்களுக்கும் இந்த தொலைபேசி இணைப்பு இன்று முதல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.

பாணமையில் விசேட அதிரடிப் படையினரால் 13 புலிகள் சுட்டுக் கொலை: இன்று காலையில் சம்பவம்


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாணமை பிரதேசத்தில் பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்படடுள்ளனர்.இச்சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் தயாரிப்பதில் மிகவும் கைதேர்ந்தவரான பரமானந்தா என்பவரும் தாக்குதலின்போது உயிரிழந்துள்ளார்.
தற்போது இந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வணங்கா மண் கப்பலைத் தடுத்து நிறுத்த முயற்சி


வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் ‘வணங்கா மண்’ நிவாரணக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கத் தரப்பு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அடுத்தவாரம் பிரித்தானியாவிலிருந்து நிவாரணக் கப்பலொன்று புறப்படவுள்ளமை தொடர்பாக அங்கிருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் நிவாரணக் கப்பல்களைக் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தியிருப்பதால், இந்தக் கப்பல் குறித்தும் தாம் கூடுதல் அக்கறை செலுத்தியிருப்பதாகவும், இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் உயர்ஸ்தானிகராலயம் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், ஊடகங்கள் வாயிலாகவே வன்னி மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிக்கொண்டு நிவாரணக் கப்பலொன்று பிரித்தானியாவிலிருந்து புறப்படவுள்ளது என்ற தகவல் தமக்குத் தெரியவந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
எந்தவொரு கப்பலும் இலங்கையின் கடற்பிராந்தியத்துக்குள் நுழைவதாயின் சட்டரீதியான அனுமதியின் பின்னரே நுழையமுடியும் என அவர் அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஆனாலும், பிரித்தானியாவிலிருந்து புறப்படவிருக்கும் கப்பல் குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாக கார்டியன் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்திருக்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர், குறித்த கப்பல் தொடர்பாக பிரித்தானியா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாயின் கப்பலை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, ‘வணங்கா மண்’ கப்பல் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தானிய அதிகாரிகளால் உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாக நிவாரணக் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான க்ரஹாம் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் சட்டவிரோத கப்பல்களைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது.

Thursday, April 2, 2009

புலிகள் மக்களை வெளியேற்ற மாட்டார்கள் : குமரன் பத்மநாதன் ஹோம்ஸிடம் தெரிவிப்பு


தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்களை செல்ல விடமாட்டார்கள் என புலிகளின் ச‌ர்வதேச‌ பிரதிநிதி குமரன் பத்மநாதன் ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோ‌‌ம்ஸிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் அனுசரணையுடன் குமார் பத்மநாதன் ஜோன் ஹோம்ஸை சந்தித்து கலந்துரையாடியதாகவும் இதன் போது ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களை விடுவிக்குமாறு அவரிடம் கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பையடுத்து ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிக்காரவை ஜோன் ஹோம்ஸ் சந்தித்து முல்லைத்தீவில் மோதல்களில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பான விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

நிவாரணம் என்ற போர்வையில் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்: கடற்படை




உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று விரைவில் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் இணைந்து வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக பிரித்தானியாவில் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் உதவியுடன் கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்தக் கப்பல் இம்மாதம் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பொதுமக்களுக்கான நிவாரணம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதற்காக 2000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகவும், இந்தக் கப்பல் குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிச்செல்லும் எந்தவொரு கப்பலையும் தடுத்து நிறுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார்

முத்துலிங்கம் தேவகுமார் (பிரபு) மறைவு : கண்ணீர் அஞ்சலி


திருகோணமலைச் சேர்ந்த முத்துலிங்கம் தேவகுமார் தனது பத்தொன்பதாவது வயதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) தன்னை இணைத்துக் கொண்ட சில மாதங்களுக்கு முன்புதான் ’83-ஜூலை நெடுங்குருதி’ திண்ணைவேலியில் இருந்து வெலிக்கடைச் சிறை வரை பாய்ந்து இலங்கையின் அரசியல் போக்கை தலைகிழாக்கிப் போட்டது.
தமிழ் மக்களின் ‘சுயகெளரவம்’ என்பதை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் தலைமை, இனவாத அரசியலாக்கி ’பயங்கரவாதம்’ ஆக சித்தரித்த போது, அதை மூர்க்கமாக எதிர்த்து முகம்கொள்ள கிளர்ந்த ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்களில் தேவகுமார் ஒருவன்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தபின் ‘பிரபு’ என்றழைக்கப்பட்ட இவனதும் இவனையொத்த பல இளைஞர்களின் கனவுகள், விடுதலைக்கென ஆயுதம் தூக்கியோரின் ’புதிய பயங்கரவாதம்’ கோரமான சிதைத்து அழித்து விட்டுப்போன தமிழ் அரசியல் சூழலில், நோயுற்று `இயற்கை` மரணமெய்திய இவன் போன்றோரின் ’நடுகல்’லில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் சில வார்த்தைகள் `இனி`யாவது பதியப்பட வேண்டும்.
ஆம்,
”மரணம் மகத்தானது வாழ்வு அதைவிட மகத்தானது’’

Wanni Operation 2009-04-01

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள்


புதுக்குடியிருப்புக்கு கிழக்காக தாக்குதலில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈ பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்று பிற்பகல் பச்சப்புல்மூடையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத எல்ரிரியினர் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டு தப்பிச்செலவதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின் போது 19 பயங்கரவாதிகளின் உடல்கள் மற்றும் படைப் பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.
19 ரி௫6 ரகதுப்பாக்கிகள்,இரண்டு பிரதான தொடர்புமைய சாதனங்கள், என்பன கைபற்றப்பட்ட பொருட்களுள் அடங்குவதாக படையினரின் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் மோதல்களில் காயமடைந்தவர்களில் 60 பேர் திருமலையில் இதுவரை உயிரிழப்பு


முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக காயமடைந்து கப்பல் மூலம் திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார். முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இதுவரை 6597 பேர் திருகோணமலைக்குக் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்களிலேயே சிகிச்சைப் பலனின்றி 60 பேர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 46 பேரும் புல்மோட்டை தற்காலிக வைத்தியசாலையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஞானகுணாளன் மேலும் தெரிவித்ததாவது:
“முல்லைத்தீவில் இருந்து இதுவரை 16 தடவைகள் காயமடைந்தவர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டனர். திருகோணமலை வைத்தியசாலைக்கு 3635 பேரும் புல்மோட்டைக்கு 2962 பேரும் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் காயமடைந்தவர்களுக்கு உதவிபுரிய வந்தவர்களும் அடங்குவர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் 10 தடவைகளில் அழைத்துவரப்பட்டோரில் 46 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 14 பேர் புல்மோட்டை வைத்தியசாலையில் மரணமடைந்தனர். 16 தடவையாக அழைத்து வரப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சைப் பலனின்றி இவ்வாரம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பெண்களும் ஒரு குழந்தையும் ஆண் ஒருவரும் அடங்குவர்..
இறுதியாக 164 ஆண்களும் 227 பெண்களும் கப்பல் மூலம் முல்லைத்தீவில் இருந்து அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 60 பேர் 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளாவர். 8 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் 54 பேரும் இறுதியாக அழைத்து வரப்பட்டவர்களில் அடங்குவர். திருகோணமலை வைத்தியசாலையில் தற்போது 254 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 128 பேர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிகிச்சையை அடுத்து வவுனியா, பதவியா போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர்மீது தாக்குதல் : அலுவலகமும் சேதம்


மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரஹ்மத்துல்லா (54) மீது தாக்குதல் நடத்திய இனந்தெரியாத குழுவொன்று அவரது அலுவலகத்துக்கும் விட்டுக்கும் தீ வைத்துள்ளன. இச்சம்பவம் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காத்தாதன்குடி ஏ.எல்.எஸ். வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் கடமையிலீடுபட்டிருந்தபோது திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவர் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். அதன் பின்னர் காரியாலயத்திலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன் தீயும் வைத்துள்ளனர். அத்துடன் அவரது வீட்டுக்கும் சென்று தீ வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.