Thursday, September 4, 2008

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் பயங்கரவாத நோக்கத்திற்கு இடமில்லை - பிரதமர் ரட்ணசிறி


தாய்நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை பயங்கரவாதிகள் மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். பயங்கரவாதிகளின் அந்த நோக்கத்திற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான மறைந்த ஏ.யூ. ஜயவர்த்தனவினால் நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் பயிற்சி மத்திய ஸ்தானத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான ஆலோசனைகளை இந்த கட்டுரைகளிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
கிராம பிரதேசத்திலிருந்து அரச சேவைக்குள் நுழைந்த அவர், பொருளாதாரத்தை கிராம மட்டத்திலிருந்து எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். நாடு பொருளாதார ரீதியில் பின்னடைந்த நிலையில் இந்த ஆலோசனைகள் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு கட்டியெழுப்பக் கூடியதாக இருந்தது.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் பயங்கரவாதிகள் பொதுமக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

இதயவீணையின் நான்காம் ஆண்டு நிறைவையொட்டி ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி


எம் இனிய மக்களுக்கும்இதயவீணை வானொலியின் அமைப்பாளர்கள்மற்றும் கலைஞர்களுக்கும்புலம் பெயர்ந்து வாழும்எம் தாயக தேசத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எமது மக்களின் உரிமைக்குரலாகவும், எமது தேசத்தின் உண்மையாகவும், மக்களின் மனச்சாட்சியாகவும் ஒலித்து வருகின்ற இதயவீணை வானொலி நான்கு அகவைகளை கடந்து விட்ட சரித்திர சாதனையோடு இன்று ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கின்றது.
இந்த சரித்திர நிகழ்வானது மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் இந்த சாதனை மகிழ்ச்சியைதுயரங்கள் நிறைந்த இந்த சூழலில் கொண்டாடி மகிழ்வதற்கு எமது மனங்கள் மறுக்கின்றன.
கடந்து போன ஆண்டுகளிலிலும் ஒவ்வொரு அகவைகளையும் இதயவீணை வானொலி கொண்டாடி மகிழ்ந்திருந்த போது எனது வாழ்த்துக்களையும் உற்சாக வரவேற்பையும் நான் தெரிவித்திருந்தேன்.
இந்த வானொலி ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கும் இன்றைய சூழலிலும்எமது மக்கள் துயரங்களையும், அவலங்களையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் துயரங்களில் இருந்து விடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது.
இருண்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை பரந்த வெளிச்சத்தை நோக்கி அழைத்து செல்வதே இந்த வானொலியின் இலக்காக இருந்து வருவதால்இன்றைய நாளில் சில கருத்துக்களை நான் உங்களிடம் மனம் திறந்து சொல்ல விரும்புகின்றேன்.
எமது மக்களின் எதிர்கால விடிவிற்கு ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. இருண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்விடங்களில் நம்பிக்கை தரும் வெளிச்சங்களை கொண்டு வருவதற்கு ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
அவலப்படுகின்ற எமது மக்களின் வாழ்வில் மேலும் சுமைகளை சுமத்தும் வன்முறைகளுக்குதூபமிடும் சக்திகளுக்கு துணை போகாமல், எமது மக்களின் சுமைகளை இறக்கி வைப்பதற்கே ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
எமது மக்களுக்கு வழிகாட்டிகளாக நின்று ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி ஊடகங்கள் வழி நடத்தி செல்ல வேண்டும். உண்மையின் பக்கம் நின்று குரல் எழுப்ப வேண்டும்.
அந்த வகையில் இதயவீணை வானொலி என்பது மக்களின் பக்கம் நின்று, உண்மையின் பக்கம் நின்று எமது மக்களை எதிர்கால விடியலை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடியது. அதன் பாதைகளில் சமாதானத்தின் எதிரிகள் தடைகளை உருவாக்கி விட்டு காத்திருப்பார்கள்.
மக்களின் நண்பர்களை, சமாதானத்தை நேசிப்பவர்களை, அமைதியை விரும்புபவர்களை, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக உழைப்பவர்களை, மக்களின் அன்றாட அவலங்களுக்கு தீர்வு காண்பவர்களை, ஐனநாயக சத்திகளை, மனித உரிமைவாதிகளை, உண்மையை உள்ளபடி உரைக்கும் கல்விமான்களை, ஊடகவியலாளர்களை கொன்று வெறி தீர்ப்பதே சமாதானத்தின் எதிரிகளின் கொடிய வன்முறையாக இருந்து வருகின்றது. இவைகளே அவர்கள் போடுகின்ற தடைகளாக இருந்து வருகின்றன.
கொல்வதும், கொல்லக்கொடுப்பதும், அதற்கான சூழ்நிலைகளை தோற்றுவிப்பதுமே எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வியல் உரிமைக்கு தடையாக இருப்பவர்களின் நோக்கமாக இருந்து வருகின்றது. இவைகள் யாவும் விடுதலையின் பெயரால் எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு படுகுழி தோண்டும் கொடிய நிகழ்வுகளாகவே நீடித்து வருகின்றன.
இந்த உண்மைகளை உறுதியுடன் நின்று உரைப்பதற்கு பல்வேறு ஊடகங்களும் தயக்கம் காட்டி வருகின்றன.
உண்மையை உரைக்கும் குரல்வளைகளுக்கு நேரே துப்பாக்கிக்குழாய்கள் நீட்டப்பட்டாலும்,உண்மையை உரைப்பவர்களை கொன்று வெறி தீர்த்து தெருவோரங்களில் வீசி எறிந்தாலும்,அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல், வன்முறைகளுக்கு துதி பாடாமல் இதயவீணை வானொலிகடந்த நான்கு ஆண்டுகளாக சவால்களை எதிர் கொண்டு எமது மக்களுக்கான தனது பங்களிப்பை செலுத்தி வந்திருக்கின்றது.
உண்மையை மறுப்பவர்கள் ஒன்று திரண்டு எதிரில் நின்றாலும் எமது மக்களின் பக்கம் நின்றுஇதயவீணை உண்மையை உறுதியுடன் உரைத்து வருகின்றது. தனக்கே உரியை வழிமுறையில் தனது சூழ்நிலைக்குள் நின்று எமது மக்களுக்கான இந்த மாபெரும் தியாகத்தை புரிந்து வருகின்றது.
அதே வேளையில் எமது மக்களுக்கு வழிகாட்டியாக நின்று நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான ஒரு அரசியல் பாதையை இதயவீணை காட்டியிருக்கிறது.
எமது அரசியல் இலக்கை அடைவதற்கு எங்கிருந்து தொடங்க முடியுமோ அங்கிருந்துதான் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையோடு, அந்த அரசியல் இலக்கின் ஆரம்பப்படி வரை பல்வேறு சக்திகளையும் அழைத்து வருவதற்கு இயதவீணை பெரும் பங்காற்றியிருக்கின்றது.
அடையமுடியாத இலக்கிற்காகவும், ஆயுதவன்முறைக்காகவும் எமது மக்கள் சமாதானத்தின் எதிரிகளின் பாலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.
இருண்ட சிறையில் வாடும் எமது மக்களை முழுமையாக மீட்டெடுத்து சமாதான தேசத்தை நோக்கி, அமைதியை நோக்கி, அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் ஐனநாயக சக்திகளுக்கு பக்கபலமாக நின்று தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்பதே இதயவீணையின் வரலாற்று கடமையாகும்.
அச்சமற்ற வாழ்வு, அமைதியான சூழல், அரசியலுரிமை சுதந்திரம் இவைகளுக்காக உழைக்க வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு எமது தயாக தேசத்தின் இதயவீணையாக உறுதி கொண்டு உழைக்கும் உண்மையின் குரல்களை நான் மனம் திறந்து பாராட்டுகின்றேன்.

ஒன்பதாவது மாகாணசபையினை வடக்கில் விரைவில் ஏற்படுத்துவோம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு


பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டெடுத்து அங்கு மாகாண சபையை ஏற்படுத்தியது போன்று விரைவில் வடக்கிலும் ஒன்பதாவது மாகாண சபையை ஏற்படுத்துவோம். பாராளுமன்றம், நீதிமன்ற நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்த ராஜ்ஜியம் வீழ்ச்சியடையும். இதற்கு இடமளிக்கலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சப்ரகமுவ வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று தெரிவான முதலமைச்சர்கள், அமைச்சர்கள், உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு பதவியேற்றனர். இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மிக விரைவில் வடக்கில் ஒன்பதாவது மாகாண சபை உதயமாகும். அதற்காக எமது படையினர் அர்ப்பணிப்புடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றனர். கிழக்கை மீட்டோம் இன்று அப்பகுதி மக்களுக்கு அவர்களுடைய தலைமையை வழங்கி ஜனநாயகத்தை வழங்கியுள்ளோம். இதே நிலை வடக்கில் உருவாகுவதற்கான காலம் தொலைவில் இல்லை. இவ்வாறான எமது படையினரின் அர்ப்பணிப்புக்கு மக்கள் மதிப்பளித்து தேர்தல்களில் வாக்களித்துள்ளனர். நாட்டின் மீது பற்று கொண்ட மக்களை நாம் மதிக்கின்றோம். தெளிவான, சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணிக்கின்றோம். இதனை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். அதற்காக உங்கள் ஒத்துழைப்பு எமக்கு தேவை. மத்திய அரசாங்கம், மாகாண சபை, பிரதேச சபை மூன்றும் இணைந்து செயற்பட வேண்டும். பாராளுமன்றம், நீதிமன்றம், நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையே ஒற்றுமை இணக்கப்பாடு இருக்க வேண்டும். அப்போதே நாட்டின் சுமுகமான நிலை இருக்கும். இம்மூன்றுக்குமிடையே முறுகல் ஏற்பட்டால் அந்நாடு வீழ்ச்சியடையும். நீதிமன்ற சுயாதீனத்தை நாங்கள் மதிக்கின்றோம். அதேபோன்று பாராளுமன்றத்தின் கடப்பாட்டையும் மதிக்கின்றோம். நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். அதனை விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற விவாதம் நடத்தப்படுவதில்லை. ஒரு ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கு நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றம், நீதிமன்றத்திற்கிடையே இணக்கப்பாடு அவசியமானதாகும்.