Wednesday, November 26, 2008

புலிகள் இயக்கம் அல்கைதா அமைப்பைவிட பயங்கரமானது - இந்திய அரசாங்கம் தெரிவிப்பு

புலிகள் அமைப்பை அல்கைதா அமைப்பைவிட பயங்கரவாத அமைப்பாக வர்ணித்திருக்கும் இந்திய அரசாங்கம் அத்தகையதொரு பயங்கரவாதக் குழுவுடன் வைத்திருக்கும் எத்தகையதொரு தொடர்பும் சனநாயகத்திற்கு எதிரானதாகவே அமையும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை எச்சரித்துள்ளது. எல்ரிரிஈ யினரது நடவடிக்கைகள் தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான டில்லி நியாய சபையின் முன் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் எல் ரி ரி ஈ யினரது கொலைக் கலாசாரம் குறித்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைக் கொலை செய்ததன் மூலம் மிகப் பயங்கரமான சர்வதேச குற்றத்தைப் புரிந்துள்ள அவ்வியக்கம் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. இந்தியாவிலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிக வேகமாக வளர்ந்து வருவதாக அண்மையில் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலைமை இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அத்திவாரத்திற்கே அச்சுறுத்தலாக இருந்துவருவதாகவும் பல முன்னணி இந்திய ஆங்கில தினசரிகளின் ஆசிரியர் தலையங்கங்களில் தொடர்ந்தும்; எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
சட்டரீதியற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அமைக்கப்பட்ட இந்நியாய சபை அதற்கு முன்வைக்கப்பட்ட பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு எல்.ரி.ரி.ஈ அமைப்பை மேலும் இரண்டு வருடங்களுக்கு தடைசெய்தது. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ் நாட்டில் வைத்து இந்தியாவின் முன்னால் பிரதம் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடHந்து 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ அமைப்பு முதன் முறையாக தடைசெய்யப்பட்டதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொரு முறையும் அத்தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.
எல் ரி ரி ஈ யினர் தமக்குத் தேவையான பெற்றோல் டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கடத்திச் செல்வதற்கான தளமாக தமிழ் நாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பதோடு இந்திய அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டின் பெரும்பான்மையான மக்களும் அறிந்துவைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் ரி ரி ஈ அமைப்பிலிருந்து தமிழ் நாட்டுக்குள் தப்பிவந்திருக்கும் எல் ரி ரி ஈ உறுப்பினர்களது நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் புலிகள் அமைப்பின் சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு

கிளிநொச்சி எந்தநேரமும் கைப்பற்றப்படலாமெனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தியை ஜனாதிபதியே அறிவிப்பார் எனக் கூறியுள்ளார். எமது படையினர் கிளிநொச்சி நகரின் எல்லையில் உள்ளனர். விடுதலைப் புலிகள் தமது தளங்களிலிருந்து பின்வாங்கிச் செல்கின்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மிகவிரைவில் கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாக எந்தவிதமான கருத்துக்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, ‘கிளிநொச்சி இதோ நாம் வருகிறோம்’ என்ற கோசத்துடன், கடும் மழைக்கு மத்தியிலும் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை முதல், அடம்பன் வடக்கு, திருமுருகண்டி, புதுமுறிப்பு ஆகிய பிரதேசங்களினூடாக இராணுவத்தினர் கிளிநொச்சியை நோக்கி மூன்று முனைகளில் முன்னேறி வருவதாகவும், ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் இரண்டு தரப்பிலும் அதிகளவு இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நடைபெற்ற மோதல்களில் இராணுவத் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது, இராணுவத்தினர் 43 பேரைக் கொன்று 80 பேரைக் காயப்படுத்தியதாக புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இராணுவத்தினர் தாம் கைப்பற்றிய பகுதிகளை தற்போது பலப்படுத்தி வருவதாகவும், படையினருக்கான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப்பொருள் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகள் மேலும் பல குறுக்குப் பதுங்குகுழிகளை அமைத்து வருவதாகவும் தெரியவருகிறது.

பிரபாகரன் பணிப்பின் பேரில் அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம்

வன்னியில் பாரிய மோதல்கள் நிகழும் இந்த வேளையில் ‘தனது 54 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம்’ என புலிகளின் தலைவர் பிரபாகரன் பணித்தமைக்கு அமைய அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் ‘புலிகளின் குரல்’ வானொலியாலும் மற்றும் புலிசார் ஊடகங்களினால் பாரியளவில் முன்னெடுக்கப்படுவது வழமை. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என பிரபாகரன் பணித்துள்ளார். இன்று காலையில் ‘புலிகளின் குரல்’ வானொலியில் சில வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. பின்னர் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஓலிபரப்பாகியது.

Tuesday, November 25, 2008

யாழ் கிளாலியில் படையினரின் தாக்குதலில் ஆயுதங்களை கைவிட்டு ஓடிய புலிகள்


படையினரின் 55வது படையணியின் எஸ்எல்எஸ்ஆர் எனப்படும் சிறிலங்கா சிங்க றெஜிமென்ட்டை சேர்ந்த படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் கிளாலி பகுதியில் முன்னேற முயன்ற புலிகளின் அணியொன்று தமது ஆயுதங்களை போட்டு விட்டு ஏ- 9 பாதையின் தெற்கே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவமானது இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் இரண்டு ரி.56 ரக துப்பாக்கிகள், ஒரு ஆர் பி ஜி துப்பாக்கி ஒரு குண்டு துளைக்காத மேல்கவசம் என்பவற்றையும் மீட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது புலிகளின் தரப்பில் பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் உ.பா. வலய சோதனைச் சாவடிகளை இடம்மாற்றுவது பற்றி பரிசீலிக்குக: உயர்நீதிமன்றம்



யாழ் குடாநாட்டின் தெல்லிப்பளை மற்றும் காங்கசேன்துறைக்கு இடையிலான உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனைச் சாவடிகளை பின்நோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு உயர்நீதிமன்றம், யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது.

தெல்லிப்பளை மஹாஜனா கல்லூரி, யூனியன் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளிகள், வைத்தியர்கள், மாணவர்களின் நலன் கருதி சோதனைச் சாவடிகளை தற்பொழுது இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பின்னோக்கி நிகர்த்துவது பற்றி பரிசீலிக்குமாறு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு நீதிமன்றம் கூறியுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா, நீதிபதிகளான சலீம் மர்சூவ் மற்றும் பி.ஏ.ரட்நாயக்க ஆகியோரைக் கொண்ட குழு மேற்கண்டவாறு பணிப்புரை வழங்கியுள்ளது.
அதேநேரம், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 24 குடும்பங்களை மீளக்குடியமர்த்துமாறு பணிப்புரை வழங்கியிருக்கும் உயர்நீதிமன்றம், மீளக்குடியமர்த்துவதற்கு இனம்காணப்பட்ட 133 பேர் மற்றும் 208 பேர் கொண்ட இரண்டு குழுக்களையும் கூடிய விரைவில் மீளக்குடியமர்த்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
உயர்பாதுகாப்பு வலயத்தில் மீளக்குடியமர்த்தல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட யாழ் மேல்நீதிமன்ற ஆணையாளர் ஆர்.ரி.விக்னராஜா தலைமையிலான ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே 600 மீற்றர் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் 24 குடும்பங்களை மீளக்குடியமர்த்துமாறு உயர்நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
உயர்பாதுகாப்பு வலயத்தில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், வடபகுதி கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வடபகுதி கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமரசிங்க, யாழ் பிரதிப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
யாழ் உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் மல்லாகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் ஆகியோர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களே நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.

களுவாஞ்சிக்குடியில் கிளேமோர் தாக்குதல்: 2 இராணுவத்தினர் பலி



மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காலை 7.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

களுவாஞ்சிக்குடி குருமென்வெளிக்கும், எருவில் கோடைமேடு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரை இலக்குவைத்தே இந்தக் கிளோமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டில் மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டது: இராணுவப் பேச்சாளர்


பூநகரி இராணுவத்தினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாடடு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை தளர்த்தப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.

வடமேற்குப் பகுதியின் கடற்பகுதி முழுவதும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குடாநாட்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடையைத் தளர்த்துவதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்கமைய குடாநாட்டு மீனவர்கள் காலை 6.30 மணிமுதல் மாலை 4 மணிவரை மீன்பிடிக்க முடியும் எனவும், முன்னர் விதிக்கப்பட்டிருந்த கரையிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரம் என்ற தடை நீக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த சில வருடங்களாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பிற்பகல் 3 மணிவரை கரையிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலான கடற்பகுதியில் மாத்திரம் மீன்பிடிக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இதனால் அவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த மீன்பிடித் தடை மீனவர்களைப் பாதித்துவிட்டது. பூநகரியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்ததாலேயே இந்தத் தடைகளை நாம் ஏற்படுத்தவேண்டி ஏற்பட்டது” என இராணுவப் பேச்சாளர் கூறினார்.
மீன்பிடித் தடை தளர்த்தப்பட்டிருப்பதால் மீனவர்கள் தமது வருமானங்களை அதிகரித்துக்கொள்ளமுடியும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயகார மேலும் தெரிவித்தார்.
பூநகரி மீட்கப்பட்டிருப்பதால் யாழ் குடாநாட்டின் தீவகப் பகுதி மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தடை நீக்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் நேற்றுக் கோரிக்கை விடுத்திருந்தார்.

Sunday, November 23, 2008

கூட்டமைப்புடன் பேசுமாறு ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனாவது பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தீர்வுகாண முடியாது என இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனாவது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வருமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வி.தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென இலங்கை அரசாங்கம் உண்மையாக விரும்புகிறதாயின், சமாதான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படவேண்டுமெனக் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்குமாயின் அது 13வது திருத்தச்சட்டமூலத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

270 படையினரை காணவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை - இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார


பரந்தனை நோக்கி எமது படையினர் முன்னேறிச் செல்கின்றனர். எமது 270 பேர் கொண்ட படையினர் காணாமல் போய் இருப்பதாகவும் அப்படை பிரிவைத் தேடிச் சென்ற மற்றொரு படை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய்யாகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பரந்தனை நோக்கி முன்னேறிச் சென்ற 270 பேரைக் கொண்ட படை அணி ஒன்றை காணவில்லை எனவும் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் இணைய தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன. அத்துடன் அப்படை அணியைத் தேடிச் சென்ற மற்றொரு படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் பல படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அந்த இணையத்தள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே இச்செய்தியை மறுத்ததுடன் இது ஒரு அப்பட்டமான பொய் எனவும் அவர் கூறினார்.