Sunday, October 26, 2008

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் -ரொபட் ஓ பிளேக்


இலங்கையில் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது வரையில் காத்திருக்காமல் அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவரும் “தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்த பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை”என்ற கருத்தை நிராகரித்தார்.
இராணுவ வெற்றி என்பது மிகமிக கடினமான ஒன்றாகும். எனக் குறிப்பிட்ட அவர் வடக்கை இராணுவத்தினர் முழுமைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளாவது, தமது போராட்டத்தை முன்கொண்டு செல்வர் என இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்தை ரொபட் ஓ பிளேக் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையின் அனைத்துக் கட்சி மாநாட்டில் இனப்பிரச்சினை தீர்வுக்கான சுமார் 90 வீத யோசனைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிளக் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் எதிர்கட்சிகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்னியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளார்கள். இது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கும் கசப்பான எதிர்காலத்தை உருவாக்கும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியும் என்றும் ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி போராட்டங்கள் நடத்த ஏற்பாடு


ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர் போராட்டங்களையும் பேரணிகளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜே.வி.பிமற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள கிராமங்களில் வீடுவீடாக சென்று விளக்கமளித்து வரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களினால் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு ஆபத்து என்று கூறிவருவதுடன் அதற்கு எதிராக சிங்கள மக்கள எழுச்சியடைய வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிவேறுபாடுகள் இன்றி சகலரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராக வேண்டும் எனவும் இல்லையேல் புலிகள் தமிழீழத்தை பெற்றுவிடுவார்கள் என்றும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
புத்த பிக்குமாரை கொண்ட ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் பொளத்த ஆலயங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட வருகின்றனர்.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படையினர் பெற்று வரும் வெற்றிகளை இல்லாமல் செய்வதற்கே தமிழ் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜாதிக ஹெல உறுமய பிக்குமார் தெரிவிக்கின்றனர்.

வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை அழிக்க வேண்டும் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் வேண்டுகோள்


ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் ஐ.நா. சபையில் நடந்த கிழக்கு-மேற்கு நாடுகள் அமைப்புகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வல்லரசு நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் அணு ஆயுதங்களைக் அழிக்கவேண்டியதன் அவசியம் குறித்து அவர் வற்புறுத்தினார்.
பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவைத் தரும் ஆயுதங்களை பெரும் எண்ணிக்கையில் வைத்திருக்கின்றன. சில நாடுகள் தங்களின் சுய அந்தஸ்துக்காக அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தாங்கள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களை அழித்து விடவேண்டும்.
ஏனென்றால் இந்த ஆயுதங்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இவற்றை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும். இவை சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னரே அரசியல் தீர்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்


கிளிநொச்சி நகரை அரசாங்கப் படைகள் விடுவித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசி;ங்காவுடன் வெள்ளியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெளிவுபடுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதிலளித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாச் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சாதகமான தீர்வுக்கு தமது ஆதரவு இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, எவ்வாறாயினும், கிளிநொச்சி நகரை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பின்னரே இதுபற்றித் தாம் ஆராயப்படும் என்று கூறியிருப்பதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.