Saturday, November 22, 2008

திருக்கோவிலில் வீடொன்றின்மீது துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, ஒருவர் காயம்!


திருக்கோவில் பகுதியில் வீடொன்றின்மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி இன்றும் 41 பேர் ஓமந்தை வந்தனர்.

வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 41 பேர் ஏ-9 வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்புத் தேடி 41 பேரும் இரண்டு குழுக்களாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்ததாகவும், முதலாவது குழுவில் 25ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குவதுடன், இரண்டாவது குழுவில் 4 ஆண்களும், 1 பெண்ணும் அடங்குவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சேமமடு மற்றும் நைனாமடு ஆகிய பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
முதலாவது குழு காலை 8.30 மணியளவிலும், இரண்டாவது குழு பிற்பகல் 12.30 மணியளவிலும் ஓமந்தையைச் சென்றடைந்துள்ளன. வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 39பேர் ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு வந்துள்ளனர். மாங்குளம் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே தாம் அங்கிருந்து வெளியேறிக்கூடியதாக இருந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தவார ஆரம்பத்தில் மேலும் 14 பேர் கிளிநொச்சியிலிருந்து கடல்மார்க்கமாக வெளியேறி கடற்படையினார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து வெளியேறி குடநாட்டுக்குச் செல்பவர்கள் குருநகர் கதியா முகாமில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு விமோசனம் வழங்காத ராஜபக்ஷ அரசாங்கம் -ரணில்


பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் மக்களுக்கு விமோசனங்களை வழங்கவும் முடியாத நிலையில் ராஜபக்ஷ் அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் உடனடியாகப் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று காலை கோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து தாங்க முடியாத சுமைக்குள்ளாகியுள்ளனர். கடன்பளு அதிகரித்துள்ளது.
இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை 45 டொலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்த அரசாங்கமோ எரிபொருள் லீட்டருக்கு 10 செஸ் வரியை விதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, November 19, 2008

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்த தினம்


தோழர் பத்மநாபா மக்களை முன்னிறுத்திய, அரசியல் தலைமைத்துவத்தை வலியுறுத்திய தலைவராக திகழ்ந்தார். இன்று ஆயுதங்கள் அதிகாரம் செலுத்தும் எமது சமூகத்தில் அன்றாடம் கொலைகளும், ஆட்கடத்தல்களும் நிகழும் சூழ்நிலையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மக்களின் அபிலாசைகளையும் முன்னிறுத்திய தோழர் பத்மநாபா நினைவுக்கூரப்பட வேண்டியவர். இத்தகைய தலைவர்களை அழித்தே தமிழ் பாசிசம் இன்றைய அவல நிலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை இட்டு வந்திருக்கிறது.
தோழர் பத்மநாபா தேசிய ஒடுக்கு முறைகளில் இருந்து இலங்கையின் தமிழர்கள், முஸ்லீம்கள் விடுவிக்கப்படுவதையும் இலங்கையின் சகல இன மக்களிடையேயும் பரந்த ஐக்கியத்தையும் சர்வதேச அளவில் சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவம் ஆகியவற்றுக்காக போராடும் மக்களுடன் நாம் கரம் கோர்த்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இடையறாது வலியுறுத்தி வந்தவர்.
ஆக்கபூர்வமான முறைகளிலேயே அவர் எப்போதும் சிந்தித்தார். மனிதர்களின் சுதந்திரமான நல்வாழ்வு என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வும், பொதுவாகவே இலங்கை மக்களின் வாழ்வு பெரும் நாசத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

ரெலோ ( சிறீ ) உறுப்பினர்கள் மீதான படுகொலை ஐனநாயக விரோதிகளின் திட்டமிட்ட செயலாகும்!


எமது சகோதர அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமாகிய ரெலோ ( சிறீ )உறுப்பினர்கள் மீதான படுகொலை என்பது எமது மக்களுக்களுக்கான ஐனநாயக வழிமுறை செயற்பாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகவே கருதப்படவேண்டும். மனித நேய விழுமியங்களுக்கு மதிப்பளிக்க மறுக்கும் ஐனநாயக விரோதச் செயலாகவே இந்த படுகொலை சம்பவத்தை நாம் கருதுகின்றோம்.
எமது மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய தியாகங்களை புரிந்த விடுதலை அமைப்புக்களில் ரெலோ அமைப்பும் பிரதான பாத்திரத்தை வகித்திருந்த ஒன்றாகும்.
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு பாசிசப் புலிகளால் தடை செய்யப்பட்ட நிலையில் அந்த அமைப்பின் பல நூறு போராளிகள் தெருத்தெருவாக சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தலைவரான சிறீ சபாராத்தினம் அவர்களும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் ரேலோ அமைப்பு எமது மக்கள் மத்தியில் இருந்து அகன்று விடும் என்றே தமிழின துரோகிகளான புலித்தலைமை எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் வழித்தோன்றல்கள் எனதங்களை அடையாளப்புடுத்தியிருந்த சிலர் தமது தலைவரையே கொன்றொழித்த புலித்தலைமையின் பக்கமே சார்ந்திருந்து வருகின்றனர்.
ஆனாலும், அராஐகங்களுக்கு அடிபணிய மறுத்து எமது மக்களுக்கானஅரசியலுரிமைக்காக ஐனநாயக வழிமுறை நின்று தலைவர் சிறீ சபாரத்தினம்அவர்களது கனவுகளை தமது தோள்களில் சுமந்து வருபவர்கள் ரெலோ ( சிறீ ) அமைப்பினர்.
இவர்களது மீள் வருகையை ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற பன்முகச்சிந்தனையோடு உண்மையான ஐனநாயக சக்திகள் மட்டும் ஆதரித்து வருகின்ற நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
ரெலோ அமைப்பிற்கு எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் ஒரு பிரதான பாத்திரம் உண்டு. அந்த வரலாற்றை தமது தலைவரை இழந்த நிலையில் அவரது வழித்தோன்றல்கள் தமது கையில் எடுத்து எமது மக்களுக்கான ஐனநாயக வழிமுறைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் ஈவிரக்கமற்ற இந்த படுகொலை திட்டமிட்ட வகையில் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.
இது போன்ற மக்கள் விரோத சக்திகளின் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! தனி மனித படுகொலைகளால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விட முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்!
இந்த படுகொலையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்! அதே வேளையில்தமது உறுப்பினர்களை இழந்து தவிக்கும் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் கனவுகளை வலுப்படுத்தும் ரெலோ அமைப்பினர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட ரெலோ உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள், உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பு உறுப்பினர்களான தோழர் வசந், மற்றும் தோழர் பரா ஆகியோருக்கு நாம் வீர மரியாதை செலுத்துகின்றோம்.!
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி

பூநகரி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது


அண்மையில் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பூநகரிப் பிரதேசத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக பொலிஸ் நிலையம் அமைக்கப்பட இருப்பதாக பாதுகாப்பு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வருகின்ற மக்கள் தற்காலிகமாக இடைத்தங்கல் முகாம்களில் பாராமரிக்கப்பட்டு வருகின்றனர். வெகுவிரைவில் அங்கு சிவில் நிர்வாகமொன்றை நிறுவி மக்கள் தமது இயல்பு வாழ்வை மேற்கொள்ளக்கூடிய சாமனிய நிலை ஒன்றை உருவாக்குவதன் பொருட்டு அரச அதிகாரிகள் கலந்தாலோசித்து வருவதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

Monday, November 17, 2008

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலைநாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறீரெலோ உறுப்பினர்கள்


இன்று 16.11.2008 மாலை வவுனியாவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நிராயுத பாணிகளான எமது கட்சி உறுப்பினர்கள் இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் கொல்லப்பட்ட எமது தோழர்களுக்கு எமது கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றோம்.அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் காயமடைந்துள்ள செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோருக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புலத்தில் உள்ள சிறீரெலோ
உறுப்பினர்கள்

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது.


இன்று வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6:45 மணியளவில் வவுனியவில் எமது கட்சி உறுப்பினர்கள் ஒரு புதிய காரியாலயம் அமைக்க துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிராயுத பாணிகளான இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மிலேச்சத்தனமான இத் துப்பாக்கித் தாக்குதலை சிறி-ரெலோ வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட எமது கட்சியை சேர்ந்த வசந்த், பரா இருவரின் மறைவுக்கும் எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம். அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, November 16, 2008

பூநகரியிலிருந்து விடுதலைப் புலிகள் தந்திரோபாயப் பின்வாங்கல்


பூநகரியிலிருந்து தந்திரோபாயமாகப் பின்வாங்கியிருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குக் கூறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அரசாங்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்படும் என அண்மையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயனந்தமூர்த்தி மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் தகவலொன்றைப் பரிமாறியிருந்ததாக ‘சண்டே லீடர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னிக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனையும் சந்தித்திருந்ததாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடிக்க முடியாதெனவும், இறுதியில் ஒருவர் இருக்கும்வரை போராடுவோம் எனவும் வன்னியில் கூறப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி ஏனைய கூட்டமைப்பினருக்குக் கூறியதாக சண்டே லீடர் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பிரசாரங்களால் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கும் தென்பகுதி மக்கள் எதிர்வரும் சில மாதங்களில் மோதலின் பாதிப்பு என்ன என்பதை உணர்ந்துகொள்வார்கள் என விடுதலைப் புலிகள், வன்னி சென்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டமொன்றைப் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்தால் சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் எனவும், விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருப்பதாக சண்டே லீடர் பத்திரிகை தனக்கு நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி கைப்பற்றப்படும் செய்தியை மாவீரர் தினத்தில் அறிவிக்க அரசு திட்டம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள கிளிநொச்சி நகரை புலிகளின் மாவீரர் தினமான நவம்பர் 27 ஆம் திகதி அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“லங்கா டிஸென்ட்’ இணையத்தளம் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரை இன்னும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியும் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தம்மை இனங்காட்ட விரும்பாத சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் “லங்கா டிஸென்ட்’ டுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி கிளிநொச்சி நகரை கைப்பற்றிய படையினரைப் பாராட்டி சுவரொட்டிகளையும் தயாரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒவ்வொரு வருடமும் மாவீரர் வாரத்தையொட்டி நவம்பர் 27 ஆம் திகதி விசேட உரை நிகழ்த்துவது வழக்கமாகும். கடந்த வருட மாவீரர் தின உரையின் பின்னர், 2008 ஆம் ஆண்டு புலிகளின் தலைவர் மாவீரர் தின உரையாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை அமெரிக்க மாநாட்டில் மன்மோகன் சிங் பேச்சு


சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என்று அமெரிக்க மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகள் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிபர் புஷ், 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை வாஷிங்டன் நகரில் நேற்று கூட்டி இருந்தார்.
இதில் புஷ், பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ரஷிய அதிபர் மெட்வதேவ், பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ஜப்பான் பிரதமர் டாரோ அசோ மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் கூறியதாவது:-
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
நிதி நெருக்கடி பிரச்சினையால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. கடனுதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு பங்கு சந்தைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்த 9 சதவீத வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் வரும் ஆண்டுகளில் இந்தியா வலுவான வளர்ச்சியை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் பிரச்சினையை சமாளிக்க முடியும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அங்கு கூறினார்.

நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் முழுமையான வெற்றியல்ல: ஐக்கிய தேசியக் கட்சி


நிலங்களைக் கைப்பற்றுவது மாத்திரம் யுத்தத்தின் முழுமையான வெற்றியெனக் கூறமுயாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நிலங்களைக் கைப்பற்றுவதுடன் நிலையான சமாதானத்துக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமெனவும் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.
“அண்மையில் நடைபெற்று முடிந்த சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசாரங்களில், கிளிநொச்சியைக் கைப்பற்றப்போவதாகவே கூறிவந்தது. தற்பொழுது அதனை மாற்றி பூநகரியைக் கைப்பற்றியுள்ளது” என அத்தநாயக்க குறிப்பிட்டார்.
இராணுவத்தினரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கம் தலையிடக்கூடாது என வலியுறுத்தியிருக்கும் அவர், அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கம், இராணுவத்தின் நிகழ்ச்சி நிரல்களில் தலையிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
பூநகரியை வெற்றிபெற்ற இராணுவத்தினரைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குத் தாம் கௌரவம் அளிப்பதாகவும், இராணுவ வெற்றிகளை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அரசாங்கம் நிலங்களைக் கைப்பற்றுவதுடன் அரசியல் தீர்வொன்றையும் முன்வைக்க வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.