Tuesday, November 11, 2008

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் 3 கப்பல்கள் 13 ஆம் திகதி புறப்படுகின்றன


வன்னி யுத்தத்தினால் பாதிக்கபட்டுள்ள வட பகுதி மக்களுக்கான தமிழக அரசினது நிவாரணப் பொருட்களை ஏற்றிய மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படுகின்றன. இந்தக் கப்பல்களில் 100 கெண்டய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்புத்துறை முகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பை வந்தடைந்தவுடன் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக வடபகுதிக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி இடம்பெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது,

பாலாவி பிரதேசமும் படையினர் வசம்


இலங்கை இராணுவத்தின் முதலாவது அதிரடிப் படைப் பிரிவினர் இன்று காலை பாலாவி பிரதேசத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நியைம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமிடையே இன்று காலை இந்தப் பிரதேசத்தில் பலத்த மோதல்கள் இடம் பெற்றதாகவும் அதன் பின்னரே பாலாவி பகுதி படையினரிடம் வீழ்ச்சியடைந்ததாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.ஏ32 வீதியின் மேற்காக பலாலாவி அமைந்துள்ளது.

ஒரு பௌத்தனாகச் சொல்கிறேன் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல- மங்கள சமரவீர


இலங்கை பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு இல்லையென சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரமான நாடு, முஸ்லிம்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்ற இனவாதக் கோசத்துடன் அரசாங்கம் ஆட்சி நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய மங்கள சமரவீர, இது இனவாதத்தைத் தூண்டுவதுடன், முஸ்லிம்களும் தனியான அலகொன்றைக் கோருவதற்கே வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
“ஒரு பௌத்தராகக் கூறுகின்றேன் இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல. அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது” என மங்கள சமரவீர கூறினார்.
முஸ்லிம்கள் வாணிபம் செய்வதற்காகவே இலங்கை வந்தவர்கள் எனவும், தமிழர்கள் வந்தேறு குடிகள் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்துத் தெரிவித்ததாகக் கூறி கடந்த வெள்ளிக்கிழமை மருதானையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
அத்துடன், தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் யுத்தமானது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கோ அல்லது மஹிந்த சகோதரர்களுக்கோ தேவையற்றது எனத் தெரிவித்த மங்கள சமரவீர, பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு படிக்கவைத்துக்கொண்டு அப்பாவிப் பிள்ளைகளை வைத்து யுத்தத்தை நடத்தி வருவதாகவும், அதேபோல, மஹிந்த சகோதரர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்கவைத்துக்கொண்டு தென்பகுதி அப்பாவி இளைஞர்களைக் கொண்டு யுத்தத்தை நடத்திவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
“தற்பொழுது வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தத்தில உயிரிழப்பவர்களின் சடலங்களை அரசாங்கம் பெற்றோரிடம் கூடக் கையளிப்பதில்லை. காணாமல்போய்விட்டதாகக் கூறிவிடுகிறது. சொந்தப் பிள்ளைகளுக்கு இறுதிக் கிரியைகளைக் கூடச் செய்யமுடியாத நிலை பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களை நோயாளர் காவு வண்டிகளில் அழைத்துவந்தால் காயமடைந்தவர்களின் உண்மைவிபரம் தெரிந்துவிடும் என்பதற்காக காயமடைந்த படையினர் பேரூந்துகளில் அழைத்து வருப்படுகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படுகிறது” என மங்கள சமரவீர கூறினார்.
இதேவேளை, கிராமிய மட்டங்களிலும், முச்சக்கரவண்டிச் சாரதிகளையும் கொண்டு புலனாய்வுப் பிரிவொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக சமரவீர பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டினார்.
இவ்வாறானதொரு முறையே சீனாவில் கடைப்பிடிக்கப்படுவதால் அதனைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அண்மையில் சீனா சென்று திரும்பியிருந்ததாகவும், இந்த நடவடிக்கை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

படையினர் முல்லைத்தீவு குமுளமுனைக் கிராமத்தை அண்மித்துள்ளனர்


முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59 வது படைப்பிரிவினர் குமுளமுனைக் கிராமத்தின் ஒரு பகுதியை இன்று பிற்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
படையினர் இவ் நகரை அண்மித்தது வன்னியை விடுவிக்கும் படை நடவடிக்கையின் இன்னொரு மைல்கல்லாகும்.
போரியல் யுக்திகளுக்கு மிக அத்தியாவசியமான குமுளமுனை பிரதேசத்தைக் கைப்பற்றுவது படையினரின் குறிக்கோளாகும். இதைத் தற்பொழுது அண்மித்தனால் புலிகளை மேலும் சிக்கலுக்குள் ஆக்கியுள்ளது.
தற்பொழுது படையினர் மூன்றுமுறிப்புக்கும் குமுளமுனைப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர்.
இக்கிராமம் புலிகளின் இதயமாகக் கருதும் முல்லைத்தீவுக்கு 13 கி.மீ தெற்காக அமைந்துள்ளது.