Saturday, September 27, 2008

தாக்குதல்கள் நகரை நெருங்குகின்றன்; கிளிநொச்சி வெறிச்சோடுகிறது


வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும், சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது

இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடும் உரிமை இணைத்தலைமை நாடுகளுக்கு கிடையாது-அரசாங்கம் இதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்கிறது ஜே.வி.பி

இணைத் தலைமை நாடுகளுக்கு இனிமேலும் இலங்கை பிரச்சினையில் தலையிடும் உரிமை கிடையாது. இதனை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிப்பதோடு அந்நாடுகளுடன் தேசிய பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடலாகாது. தமிழ் மக்களை இரண்டாம் தரப்புப் பிரஜைகளாகக் கூறுவது அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் கருத்தாகும் என்று ஜே.வி.பி. தெரிவிக்கின்றது.இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை என்று ரத்தானதோ அன்றே இணைத் தலைமை நாடுகளின் செயற்பாடும் ரத்தாகிவிட்டது. இதற்கு மேலும் எமது பிரச்சினையில் தலையிடும் உரிமை அந்நாடுகளுக்கு கிடையாது. ஆனால் இதனை அரசாங்கம் தெரிவிப்பதில்லை. மாறாக புலிகளுக்கு சார்பான நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாட்டு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கை குலுக்கி மகிழ்கிறார்.அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுக்கும் அதேவேளை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் கைங்கரியத்திலும் இறங்கியுள்ளது. எதுவிதமான தெளிவான உறுதியான கொள்கை இல்லை.விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை. எனவே எவ்வாறாவது யுத்தத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதே அவர்களது நோக்கமாகும். தமிழ் மக்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செய்ய வேண்டும். இதற்கு எதிராகவே மேற்கு நாடுகள் செயற்படுகின்றன. சர்வதேச தலையீடுகளுக்கான வாய்ப்புக்களை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கின்றது. யுத்தத்தால் இடம்பெயரும் தமிழ் மக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்களை வழங்கி அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள தவறிவிட்டது.தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் தவறியுள்ளது. எனவே அம்மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமான நாடென்றும் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளென்ற கருத்துக்களும் அரச தரப்பினால் வெளியிடப்படுகின்றது.இவ்வாறான சூழ்நிலைகள் எமது நாட்டு பிரச்சினையில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகள் தலையிடும் நிலைமையை உருவாக்குகின்றது. அரசாங்கத்திடம் தெளிவான உறுதியான கொள்கை இல்லை. நாட்டுக்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. 17 திருத்தச் சட்டத்தை முன்னெடுத்து சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலை தொடருமானால் எமது நாட்டு பிரச்சினையில் வெளிநாடுகளின் தலையீடுகள் தவிர்க்க முடியாததாகிவிடும்

ஏ-9 வீதியுடாக கிளிநொச்சியை நெருங்கும் படையினர்: பாதுகாப்பு அமைச்சு



மேற்கு ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் வடக்குப் பகுதிகளை அரசாங்கப் படைகள் நெருங்கி வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

57வது படையணி கொக்காவிலை நெருங்கியிருப்பதுடன், அதிரடிப்படை-2 மாங்குளத்தை அண்மித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சு, அக்கராயன் குளத்திற்கு மேற்கே நேற்றுமுன்தினம் புதன்கிழமை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது மேற்கொண்;ட தாக்குதலில் இரண்டு பதுங்கு குழிகள் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிரடிப்படை-1 நாச்சிகுடா பகுதியில் கடந்த புதன்கிழமை முன்நகர்வு முயற்சியில் ஈடுபடும் படையினர் அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 3 போராளிகள் காயமடைந்துள்ளனர்.

வன்னேரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 4 விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படும் அதேவேளை,விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் அமைந்துள்ள இடத்தை படையினர் தாக்குதல் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் ஒலிபரப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் உயரிழந்ததாகவும்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
வானொலி தொடர்பாடல் உபகரணங்கள் ரி-56 றிபிள் மற்றும் 300 குண்டுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சு, கடந்த புதன்கிழமை வவுனியாவிற்கு வடமேற்கே பாலமோட்டைப் பகுதியில் அதிரடிப்படை-2க்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 6 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாகவும், அங்கு ரி-56 ஆயுதத்துடன் 65 துப்பாக்கி ரவைகள், 3 குண்டுகள் மற்றும் 3 கைக்குண்டுகள் ஆகியனவற்றை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஓமந்தை வீதிக்கு அண்மையாகவுள்ள நாவற்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குழிகள் அமைந்துள்ள பகுதிகளில் 56வது படையணியினர் கடந்த புதன்கிழமை விடுதலைப் புலிகளுடன் மோதியதாகவும், இதன்போது பகுங்குழியின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததாகவும் படையினர் உறுதிப்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டது.
முல்லைத்தீவு ஆண்டான்குளம் காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன், 59வது படையணியினர் சண்டையில் ஈடுபட்டதாகவும், இதன்போது 5 விடுதலைப் புலிகள் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்ததாகவும் படையினர் கூறிய அதேவேளை, படைத்தரப்பில் 17 பேர் உயரிழந்தும், காயமடைந்துள்ளததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கை வெற்றியின் விளிம்பில் -பாதுக்காப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ


பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம்.தற்போதைய போரில் எமது படைகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற பூரண நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வெற்றியை விரைவாக நாம் பெற்றுவிடுவோம். என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபஷ இலண்டன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் வெடிபொருட்கள் மீட்பு


நீர் கொழும்பு பகுதியில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது C-4 ரக வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி போன்றன கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

அரியாலை கிழக்கு பகுதி மீது விடுதலைப்புலிகள் ஷெல் தாக்குதல்-படைவீரர் பலி; மற்றொருவர் காயம்


யாழ்ப்பாணம், அரியாலை கிழக்குப் பகுதி மீது விடுதலைப் புலிகள் நேற்று மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அரியாலை கிழக்கு பகுதியை நோக்கி விடுதலைப் புலிகள் நேற்று காலை 10.30 மணியளவில் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டு படையினர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஞானதிலக (வயது 23) என்பவர் உயிரிழந்ததுடன் சந்திரசேகர (வயது 34) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.