Saturday, October 25, 2008

ராமேஸ்வரம் கோர்ட்டில் சீமான், அமீர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


இயக்குநர் சீமான் மற்றும் அமீர் இன்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ராமேஸ்வரம் போராட்டத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நேற்று இரவு கியூ பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இன்று இருவரையும் விமானம் அல்லது கார் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கவுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணிப்பீடு நாளை


வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பொன்றினை மேற்கொள்ளத் தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நளை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறும். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவனங்களுடன் வருகை தந்து தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி முன்னரங்கப் பகுதியில் கடும் மோதல்கள்


கிளிநொச்சி யுத்தகளத்தில் கடந்த 48 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 57வது படைப்பிரிவு முன்நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு, மணியங்குளம் மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய பகுதிகளில் 57வது படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடன் பல்வேறு மோதல்களில் ஈடுபட்டதாகவும், கிளிநொச்சி தெற்கு பணிக்கன்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
572வது பிரிகேடியர் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் அக்கராயன் குளம் வடக்குப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டளவு தாக்குதலில் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏ௩2 வீதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது 583வது படைப் பிரிவினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், பல்லவராயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, வன்னி மோதல்களில் இராணுவத்தினருக்கு ஏற்படும் உண்மையான இழப்புக்கள் குறித்து கொழும்பு சரியான தகவல்களை வெளியிடுவதில்லையென விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் முன்னேறுவதற்கு எடுத்த முயற்சிகளை விடுதலைப் புலிகள் முறியடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அந்த இணையத்தளம், இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் பாதுகாப்புத் தரப்பிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுஇவ்விதமிருக்க, தற்பொழுது வன்னியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இராணுவ நடவடிக்கைகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்கா.


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார். சென்னை பல்கலைக் கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு `இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலமோ, சட்ட நடவடிக்கைகள் மூலமோ மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் இதைச் சொல்கிறோம்.
இலங்கை அரசு, தனது சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு, சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன. அதற்கு வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுவின் பணிகளை செயல்படுத்த இலங்கை அரசு முன் வர வேண்டும்.
சிங்கள மக்களில் ஒருசாரார் முதலில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டு, அதன்பின்னர் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.
இலங்கை தமிழர்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு இரையாகாதவாறு வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்காதான்.
இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகிய முத்தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது சாத்தியம்தான். தற்போது இதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இலங்கை சொர்க்க பூமியாக மாறும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் இலங்கையின் நிலையே மாறிவிடும். இவ்வாறு அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார்.
முன்னதாக, அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரெட்ரிக் கெப்லான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வித்துறைத் தலைவர் மால்வியா நன்றி கூறினார்.

Friday, October 24, 2008

அரசியல் தீர்வை முன்வைக்குமாறு இந்தியா அழுத்தம்கொடுக்கவில்லை: முன்னாள் உயர்ஸ்தானிகர்


இந்திய மத்திய அரசாங்கம் என்னதான் அழுத்தங்களை எதிர்நோக்கினாலும் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கவேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையென இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு நட்புரீதியான ஆலோசனைகளையே’ வழங்கியுள்ளது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் என்.என்.ஜா கொழும்பு ஊடகமொன்றிடம் கூறினார்.இலங்கைக்கு, இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இன்ன தீர்வை முன்வைக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. என்ன பிரச்சினை தோன்றினாலும் அதனைத் தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஷ்பரம் புரிந்துணர்வு உள்ளது” என ஜா தெரிவித்தார்.
தேர்தல் நெருக்கியுள்ள நிலையில் தமிழகத்திலுள்ள கட்சிகள் புதுடில்லிக்கு இலங்கை விடயத்தில் அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இனப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் சில முன்மொழிவுகளை முன்வைத்திருப்பதாகவும் கூறினார். அதேநேரம், உள்விவகாரத்தில் தலையிடாமல் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தினால் அது பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மனிதநேயப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்காத எந்த விதமான இராணுவ நடவடிக்கைகக்கும் இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஜா மேலும் கூறினார்.

தடையை நீக்குமாறு விடுதலைப் புலிகள் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்


தமது அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் எனவும், பழையவற்றை மறந்து தமது போராட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்குமாறும் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவரைவில் இலங்கை இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இழக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் வெகுவிரைவில் மீட்கப்படும் எனவும் பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள விசேட செவ்வியில் நடேசன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் கஜபாபுர பகுதியினை கைப்பற்றியுள்ளனர்


பாதுகாப்பு படையினர் வெலி ஒயவில் அமைந்துள்ள கஜபாபுர பகுதியினை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பகுதியில் பல பாதுகாப்பு அரண்களும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்ட்டுள்ளது.
படையினரின் இந்த நடவடிக்கைளின் போது புலிகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்துக்குப் பணியாளர்கள் அனுமதி


காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் பொருள்களை ஏற்றி இறக்கும் பணிகளுக்காக பணியாளர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துகின்ற நிமல்லவ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததுடன், மற்றுமொரு சரக்குக் கப்பலான றுகுணு கப்பல் சேதமடைந்திருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காங்கேசன்துறை மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் பொருள்களை ஏற்றியிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தெல்லிப்பழை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இன்று வெள்ளிக்கிழமை இரண்டு துறைமுகங்களுக்குமான பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கப்பல்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஈ.பி.டி.பி.யின் அழைப்பின் பேரில் நேற்று வியாழக்கிழமை யாழ் குடாநாட்டில் கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை குடாநாட்டின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, October 22, 2008

இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்தித் தருமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



சோவியத் யூனியனிடமிருந்துகொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்தித் தருமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


“சோவியத் யூனியனாக இருந்தபோது கொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்கள் பழுதடைந்துள்ளன. சோவியத் நாடுகள் தனியாகப் பிரிந்திருப்பதால் இராணுவத் தளபாடங்களைத் திருத்திக் கொள்வதில் சிக்கல் தோன்றியுள்ளன. எனினும், இந்த இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்திக் கொடுக்கும்” என அவர் கூறினார்.
இராணுவ புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது இதுவரை ரஷ்யாவுடன் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கோதபாய, “பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் இராணுவ விடயங்களை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான அவசியம் பற்றிய விளிப்புணர்வொன்றை ஏற்படுத்தவேண்டும்” என்று கோதபாய குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்பொழுது வன்னிப் பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

காங்கேசன்துறையில் சரக்குக் கப்பல்கள் மீது தற்கொலைத் தாக்குதல்



யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற இரு சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய இரு கப்பல்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதை விடுதலைப் புலிகள் மறுப்பதாக பாதுகாப்புத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்குச் சென்றிருந்ததாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய கடற்படைச் சிப்பாய் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளின் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், ஒரு படகு நிமல்லவ கப்பல் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் வெடித்ததாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நிமல்லவ கப்பலுக்கு கணிசமானளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக டி.கே.பி.தசநாயக்க தெரிவில்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா ஒருபோதும் உதவி வழங்காது இந்தியப் பிரதமர் மன்மோகன்



விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா ஒருபோதும் உதவி வழங்காது என ஜப்பான் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சென்ற உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய அமைப்பு எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அதிகாரி, அவ்வாறானதொரு அமைப்புக்கு ஒருபோதும் இந்தியா உதவிசெய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
வன்னிக்கு உணவு
வன்னியில் நடைபெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஏற்கனவே ஒருதொகுதி உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருள் தொகுதிகள் வன்னிப் பகுதியைச் சென்றடைந்திருப்பதுடன், அந்த உணவுப் பொருள்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய இந்தியா முயற்சிப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தற்பொழுது இலங்;கையில் நிலவும் சூழ்நிலையில் மனிதநேயப் பிரச்சினைகள் காணப்படுவதாகவே இந்தியா பார்க்கிறது எனவும், நீண்டகாலமாக இலங்கையில் தொடரும் முரண்பாடுகள் அரசியல் தீPர்வொன்றின் மூலமே தீர்த்துவைக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு எனவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

Monday, October 20, 2008

புதிய அமைப்பு தொடங்குகிறார் தயாநிதி மாறன்


முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று துவக்குகிறார்.
மு.க.அழகிரிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய மாறன் சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், சமீப காலமாக திமுக அரசுக்கு எதிராக செய்திகளை சன் டி.வி.அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருவதுடன்,எதிர்கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அத்துடன் விஜயகாந்த், சரத்குமார், வைகோ, ராமதாஸ், இடதுசாரி கட்சி தலைவர்களின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
இந்நிலையில், தனது தந்தை முரசொலி மாறன் நினைவாக ‘முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று மாலை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மாறன் அறக்கட்டளை, சன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் மாறன் சகோதரர்கள் அரசியல் ரீதியாக களத்தில் இறங்கும் வகையில் முரசொலிமாறன் என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை துவக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னோடியாகவே தயாநிதி மாறன் இதனை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சந்த்ராயன்-1 விண்கலத்தை நிலவுக்கு ஏவுகிறது இந்தியா


இந்தியாவின் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து எதிர்வரும் புதன்கிழமை ‘சந்த்ராயன்-1’ விண்கலம் நிலவுக்கு ஏவப்படவுள்ளது. இதற்கான விநாடிகளை எண்ணும் நடவடிக்கை (கவுண்ட்-டவுன்) இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1,380 கிலோ எடையுள்ள இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி-சி 11 ரொக்கட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.
வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏதும் ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி புதன்கிழமை பி.எஸ்.எல்.வி. ரொக்கட் விண்ணுக்குச் செலுத்தப்படும். பூமியிலிருந்து 250 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் சந்த்ராயன் விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமிலிருந்து மேலும் தூரத்துக்குத் தள்ளுவதற்கு விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ரொக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.
மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும். இந்த 3,87,000 கி.மீ. உயரத்தை அடைந்தபின் சந்த்ராயன் விண்கலம் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி முடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து ஒரு துணை விண்கலம் நிலவுக்குள் இறங்கி, நிலவின் வளி மண்டலத்தையும் தரையிறங்கிய பின் அதன் மண்ணையும் இந்த விண்கலம் ஆய்வு செய்து சந்த்ராயன் விண்கலத்துக்கு தகவல் தரும், அந்தத் தகவலை சந்த்ராயன் வாங்கி பூமிக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
இந்திய-அமெரிக்க அணுவாயுத ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் விண்கலத்தை ஏவும் இந்தியாவின் இந்த முயற்சி முக்கிய இடம்பிடித்திருப்பதாக ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பராக் ஒபாமாவுக்கு முன்னாள் இராஜாங்கச் செயலாளர் பவல் ஆதரவு


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய செனெட்டரென பராக் ஒபாமாவை கொலின் பவல் வருணித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் மற்றும் பராக் ஒபாமா ஆகிய இருவருக்கும் நாட்டை ஆட்சி செய்கின்ற தகுதியிருந்தபோதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சிறந்த முறையில் கையாளக்கூடிய திறமை பராக் ஒபாமாவுக்கே அதிகமாக உள்ளதெனவும் கொலின் பவல் குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஆக்கபூர்வமானதாக இல்லையெனக் கூறி தனது கட்சியை கொலின் பவல் விமர்சித்துள்ளார்.

எனினும், ஜோன் மக்கெய்னால் தெரிவுசெய்யப்பட்ட குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலின் இன்னமும் ஜனாதிபதிப் பதவிக்குத் தயாராகவில்லை என்பது தனது அபிப்பிராயமெனவும் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி சென்னி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்வெல்ட்க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக 4 வருட காலமாக வகித்து வந்த தனது பதவியிலிருந்து கொலின் பவர் ஓய்வுபெற்றார்.

தற்கொலைக் குண்டுதாரியின் 'சிம் காட்' உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் கைது


அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியின் சிம் அட்டையின் உரிமையாளர் யாழ் குடாநாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தற்கொலைக் குண்டுதாரி பயன்படுத்திய கையடக்கத்தொலைபேசியின் உரிமையாளரான புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தியாகராஜா சுதாகரன் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவரைப் பொலிஸார் யாழ் நீதிமன்றத்தில் நிறுத்தியதுடன், எதிர்வரும் 30ஆம் திகதிவரை பொலிஸ் கட்டுப்பாட்டில் விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் தாயார் நேற்றையதினம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலைக் குண்டுதாரி தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.