Thursday, April 2, 2009

நிவாரணம் என்ற போர்வையில் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்: கடற்படை




உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவிவழங்கும் நோக்கில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று விரைவில் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழையும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பல்வேறு நலன்புரி அமைப்புக்கள் இணைந்து வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காக பிரித்தானியாவில் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் ‘அக்ட் நௌவ்’ அமைப்பின் உதவியுடன் கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்தக் கப்பல் இம்மாதம் இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பொதுமக்களுக்கான நிவாரணம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதற்காக 2000 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை நோக்கிப் புறப்படவிருப்பதாகவும், இந்தக் கப்பல் குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத கடற்படைப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிச்செல்லும் எந்தவொரு கப்பலையும் தடுத்து நிறுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர் என அவர் தெரிவித்தார்

No comments: